இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் கடந்த 1980, 90களில் புரட்சிக்கரமான கருத்துகளுடன் பல படங்களை எடுத்தவர். சமுதாயம், அரசியல், சட்டம், நீதி என வாழ்வியல் சார்ந்த பல பிரச்சனைகளை தனது படங்களில் பேசுபொருளாக வைத்தவர். நல்ல இயக்குநராக ரசிகர்களால் பாராட்டப்பட்டவர்.
இதைவிட மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இவர் நடிகர் விஜயின் தந்தை. அவரது ஆரம்ப கால சினிமா பயணத்தில் விஜய் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்து அவரை கரை சேர்த்தவர் எஸ்ஏ சந்திரசேகர்தான். செந்தூரப்பாண்டி படத்தில் விஜயை, விஜயகாந்துடன் நடிக்க வைக்க முயற்சி எடுத்தவரும் எஸ்ஏ சந்திரசேகர்தான்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டார். இன்றைய இளம் இயக்குநர்கள் மூத்தவர்கள் சொன்னால் அதை கேட்காமல் புறக்கணிக்கின்றனர் என்ற வருத்தத்தை அதில் வெளிப்படுத்தினார்.
நான் ஒரு இளம் இயக்குநருக்கு சில மாதங்களுக்கு முன் போன் செய்தேன். அப்போது உங்கள் படம் பார்த்தேன். பாதி படம் சூப்பராக இருக்கிறது. அருமையாக இருக்கிறது, என்று சொல்லிக்கொண்டு இருந்தேன். அப்போது அவர் உற்சாகமாகி என்னுடன் நன்றாக பேசிக்கொண்டு இருந்தார். இரண்டாம் பாதி தொய்வாக உள்ளது. நீங்கள் படத்தில் காட்டிய மதத்தில், அப்படிப்பட்ட மூட நம்பிக்கை எல்லாம் இல்லை. அதில் தந்தையே பிள்ளையை, நரபலி கொடுப்பது போல் காட்டியுள்ளீர்கள், அப்படி எல்லாம் அந்த மதத்தில் இல்லை என்றேன். உடனே, சார் நான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி போனை கட் செய்துவிட்டார்.
நான் அந்த படம் வெளிவருவதற்கு 5 நாட்களுக்கு முன்பே பார்த்துவிட்டேன். நான் சொன்ன பிறகாவது படத்தில் அந்த பின்பகுதியில் மாற்றம் செய்திருக்கலாம். நான் சொன்னதை அந்த இயக்குநர் ஏற்கவில்லை. படம் வெளியான பிறகு, ரசிகர்கள் அந்த படத்தை வெச்சு செய்தார்கள் என்று கூறினார்.
எஸ்ஏ சந்திரசகேர் மறைமுகமான சொன்ன அந்த படம் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபரில் வெளிவந்த லியோ தான். அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம்தான் அவர் பேசியிருக்கிறார். ஹீரோவின் தந்தை, மூத்த இயக்குநர் சொல்லியும், லோகேஷ் கனகராஜ் அதை அலட்சியப்படுத்தினார். அதற்கான பின்விளைவுகளை நன்றாக அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





