நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார். வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி நடிகர் விஷால் பிறந்த நாளில் அவரது திருமணம் நடைபெற உள்ளது. இனி விஷாலின் பிறந்த நாளும் திருமண நாளும் ஒன்றாக இருக்கப் போகிறது. 47 வயதான நடிகர் விஷால் 35 வயதான நடிகை சாய் தன்ஷிகாவை மனைவியாக தேர்ந்தெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சாய் தன்ஷிகா மறைந்த இயக்குனர் ஜெகநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் கல்லூரி மாணவிகளில் ஒருவராக நடித்திருப்பார். துருவன் என்ற கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருப்பார். வனாந்திர காட்டுக்குள் செல்லும் என்சிசி மாணவியர் 5 பேரில் ஒருவராக அந்த படத்தில் சாய் தன்ஷிகா நடித்திருந்தார். வீரம் கொண்ட ஒரு மங்கையாக அந்த படத்தில் அவரது நடிப்பு கவனம் பெற்றது.
தொடர்ந்து மாஞ்சா வேலு என்ற படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு காதலியாக சாய் தன்ஷிகா நடித்திருந்தார். அதே போல் அரவாண் படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாகவும், இயக்குனர் பாலா இயக்கத்தில் அதர்வா நடித்த பரதேசி படத்தில், தேயிலை தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்யும் ஒரு குழந்தையின் தாயாகவும் சாய் தன்ஷிகா நடிப்பு அதிக பாராட்டைப் பெற்றது.
இதையடுத்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில், சாய் தன்ஷிகா ரஜினியின் மகளாக நடித்திருந்தார். யோகி என்ற கேரக்டரில் நடித்த அவர் இந்த படத்தில் சில சண்டை காட்சிகளிலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்போது யோகிடா என்ற படத்தில் அதிரடி சண்டை நாயகியாக நடித்திருக்கிறார்.
வழக்கமாக நடிகர்களை திருமணம் செய்துக்கொள்ளும் நடிகைகள் திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டார்கள். அதற்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் போட்ட நிபந்தனையாக இருக்கும். அல்லது குடும்ப வாழ்க்கைக்குள் வந்த பிறகு இனி எதற்கு நடிப்பு என்று சம்பந்தப்பட்ட அந்த நடிகைகளே இனி நடிப்பு வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து குடும்பத்தை பிள்ளைகளை கவனிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த சூழலில் நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை திருமணத்துக்கு பிறகு நடிக்க அனுமதிப்பாரா, மாட்டாரா என்ற ஒரு சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இதற்கு நேற்று பங்கேற்ற ஒரு விழாவில் நடிகர் விஷால் வெளிப்படையாக பதில் தந்திருக்கிறார். விஷால் இதுபற்றி கூறுகையில், திருமணத்துக்கு பிறகும் தன்ஷிகா கண்டிப்பாக நடிப்பார். அவர் திறமையை நான் பூட்டி வைக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். விஷால் நடிப்புக்கு பச்சைக்கொடி காட்டினாலும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதா வேண்டாமா என்று முடிவு தன்ஷிகாவிடம்தான் உள்ளது.





