தமிழ் சினிமாவில் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை யார் என்று கேட்டால் சாய் பல்லவிதான் என்று தைரியமாக சொல்லலாம. ஏனெனில் கடந்த 10 நாட்களாக அவர்தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறார். அமரன் படம் தந்த வெற்றி, அவரது பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது.
தீபாவளி பண்டிகைக்கு வெளியான அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவியின் நடிப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
மறைந்த தமிழக ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமரன் படத்தில் முகுந்த் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவரது மனைவியாக இந்து ரெபேகா வர்கீஸ் என்ற கேரக்டரில் சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களால் பாராட்டை பெற்றது. அந்த அளவுக்கு அழுத்தமான நடிப்பை அவர் தந்திருக்கிறார்.
இந்நிலையில் மும்பையில் அமரன் படத்தை விளம்பரப்படுத்தும் பிரமோ நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவியும் கலந்து கொண்டார். அப்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களுக்கு இடையிலான வித்தியாசம் குறித்து சாய்பல்லவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதுபற்றி சாய்பல்லவி கூறுகையில், பாலிவுட் அளவுக்கு அதிக ஊதியம் பெறாத ஏராளமான உதவி இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர். அதனால்தான் இங்கு ஒருவர் உதவி இயக்குனராக இருந்தால் அவர்கள் அடுத்த படத்துக்கும் வருகின்றனர். காரணம், அது மிகவும் நல்லதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
ஆனால் தென்னிந்தியாவில் அவர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்கப்படுகிறதா என்று எனக்கு தெரியவில்லை. எனவே அவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் திறமையாளர்களாகவும் இருந்தும் அவர்களுக்கு தகுதியான ஊதியம் கிடைக்காதது வேதனை அளிக்கிறது என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். உதவி இயக்குனர்களின் சம்பளம் குறித்து ஹீரோக்களே கண்டுக்காத நிலையில், சாய்பல்லவியின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.





