மலையாளத்தில் பிரேமம் என்ற படம் மூலம் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சாய் பல்லவி. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த சாய்பல்லவி தொடர்ந்து தமிழில் மாரி 2 என்ஜிகே மற்றும் கார்கி ஆகிய படங்களில் நடித்தார். இதில் கார்கி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
கடந்தாண்டில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படம் வெளியானது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த படத்தில் சாய்பல்லவி நடித்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜ் பயோபிக் கதையில் உருவான இந்த படத்தில் இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் சாய்பல்லவி வாழ்ந்திருந்தார்.
அமரன் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரூ. 325 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. இந்த படம் தந்த அமோக வெற்றியால் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி படங்களில் தொடர்ந்து சாய்பல்லவி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்தியில் மிக பிரமாண்டமான படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இராமாயணம் என்ற படத்தில் சீதையாக நடிகை சாய்பல்லவி நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக வேறு சில படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை சாய்பல்லவி தவிர்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சாய்பல்லவி மருத்துவம் படித்தவர். அவர் டாக்டராக இருந்தும் நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். இந்நிலையில் கோவையில் அவர் சொந்தமாக மல்டி ஸ்பெஷல் ஹாஸ்பிடல் ஒன்றை உருவாக்கி வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சாய்பல்லவியிடம், எதிர்காலத்தில் உங்களது பயோபிக் படம் உருவானால் என்ன தலைப்பு வைப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகை சாய்பல்லவி, என்னுடைய வாழ்க்கை கதையை படமாக்கினால் அதற்கு 50 ஷேட்ஸ் பல்லவி என்றுதான் பெயர் வைப்பேன். ஏனென்றால் நாம் எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுவது கிடையாது. நானும் அப்படித்தான். நண்பர்களுடன் ஒரு மாதிரியும் உறவினர்களிடம் வேறு மாதிரியும் பெற்றோருடன் இன்னொரு மாதிரியும் இருப்பேன். இப்படி நிறைய முகங்கள் எனக்கு உண்டு. எனவேதான் இந்த பெயரை வைக்க ஆசைப்படுகிறேன் என்று வெளிப்படையாக சாய்பல்லவி கூறியிருக்கிறார்.





