தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத் திறமைகளோடு வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ். பூச்சூடவா என்னும் திரைப்படத்தில் வசனகர்த்தவாக தமிழ் சினிமாவில் வளர்ந்த அவர், தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
2001 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. வாலி திரைப்படத்தின் போது எஸ் ஜே சூர்யாவிடம் உதவியாளராக இருந்த ஏ ஆர் முருகதாஸ், அந்த நேரத்தில் கதாநாயகன் அஜித்திடம் தனது கதையை கூற அப்படி உருவானது தான் தீனா திரைப்படம்.
இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, அடுத்தடுத்து மெகா ஹிட் களை கொடுக்க ஆரம்பித்தார் ஏ ஆர் முருகதாஸ். விஜயகாந்த் வைத்து ரமணா, சூர்யாவை வைத்து கஜினி என அவரது வெற்றிகள் நீண்டு கொண்டே சென்றன. இந்த சமயத்தில் திடீரென தெலுங்கு சினிமாவிற்கு சென்ற அவர் சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலின் எனும் திரைப்படத்தை இயக்கினார்.
அதுவும் சூப்பர் டூப்பர் வெற்றியை ருசிக்க, அங்கிருந்து பாலிவுட் உலகிற்கு சென்ற அவர், கஜினி திரைப்படத்தை ரீமேக் செய்தார். அமீர்கான் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, ஏ ஆர் முருகதாஸுக்கு இந்திய அளவிலான இயக்குனர் அந்தஸ்தை கொடுத்தது. பிறகு விஜயை வைத்து துப்பாக்கி கத்தி என்ற இரண்டு சூப்பர்ஹிட் வெற்றிகளை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ், மான் கராத்தே ராஜா ராணி போன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்.
இந்த நிலையில் சமீப காலமாக முருகதாஸின் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றன. ஸ்பைடர், ரஜினியை வைத்து எடுத்த தர்பார், விஜய் ஹீரோவாக நடித்த சர்க்கார் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது, சிவகார்த்திகேயனை வைத்து அவர் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்காக மீண்டும் பாலிவுட் உலகத்திற்கு செல்லும் அவர், இந்த முறை சல்மான் கானை வைத்து இயக்குகிறார். இந்த படத்திற்கு சிக்கந்தர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சல்மான் கான் ரசிகர்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.





