எட்டு தோட்டாக்கள் குருதி ஆட்டம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 3 பிஹெச்கே. நடிகர்கள் சரத்குமார் சித்தார்த் நடிகை தேவயானி மிதாரகுநாத் சைத்ரா ஜே ஆச்சார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த படம் கடந்த 4ம் தேதி வெளியானது.
வாடகை வீட்டில் வசிக்கும் நடுத்தர மக்களின் பெரிய கனவாக இருப்பது எப்படியாவது தங்களது காலம் முடிவதற்குள் சொந்த வீடு கட்டிவிட வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட கனவுகளை சுமக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கதைக்களத்தில் 3 பிஹெச்கே படம் உருவாகி உள்ளது.
பிரபல பாடகியான பாம்பே ஸ்ரீயின் மகன் அம்ரீத் ராம்நாத் 3 பிஹெச்கே படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் திரைக்கு வந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரித்திருந்தார். இந்த படம் 4 நாட்களில் 6.8 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் 3 பிஹெச்கே படத்தின் நன்றி அறிவிப்புக்கூட்டம் நடந்தது. அந்த விழாவில் படத்தில் நடித்த சரத்குமார் சித்தார்த் தேவயானி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், ரசிகர்களிடம் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், சரத்குமார் பேசுகையில், படத்தின் இசையமைப்பாளர் அம்ரீத் ராம்நாத் காட்சிக்கு என்ன வேண்டுமோ அதற்கான அழகான இசையை கொடுத்துள்ளார். அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, என் வாட்ச் ரொம்ப நல்லா இருக்கிறது என்று சொன்னார். எனவே இந்த வாட்சை அவருக்கு பரிசளிக்கிறேன் என்று கூறிய நடிகர் சரத்குமார், தனது கையில் கட்டியிருந்த விலை உயர்ந்த வாட்சை கழட்டி இசையமைப்பாளர் அம்ரீத் ராம்நாத்துக்கு பரிசாக வழங்கினார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும்போது, தனக்கு பிடித்தமானவர்களுக்கு சட்டென தனது கையில் கட்டியிருக்கும் வாட்ச்சை கழட்டி பரிசளிப்பதை சினிமாவில் நடிக்கும் போது வழக்கமாக வைத்திருந்தார். இப்போது அதே பாணியில் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான நடிகர் சரத்குமாரும் செய்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.





