நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்து பின்னாளில் மிகப்பெரும் இயக்குனராக உயர்ந்தவர் ஷங்கர். இவரது முதல் திரைப்படமாக வெளியானது ஜென்டில்மேன். அர்ஜுன் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தனது முதல் திரைப்படத்திலேயே சிக்சர் விளாசி பலரையும் திரும்பி பார்க்க வைத்தார் சங்கர்.
இதனைத் தொடர்ந்து அவர் கமல்ஹாசனுடன் இணைந்து எடுத்த இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் பலரும் அறியும் இயக்குனராக உச்சத்திற்கு சென்றார் சங்கர். இதனைத் தொடர்ந்து சங்கர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் வசூல் குவிக்க ஆரம்பித்தன.
குறிப்பாக முதல்வன், சிவாஜி எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்கள் அவரை இந்திய திரை உலகிற்கு அழைத்துச் சென்றன. இப்படி தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வந்த சங்கர் தற்போது, திரைக்கதையில் மாயாஜாலம் காட்ட முடியாமல் தள்ளாடி வருகிறார். இந்த சறுக்கல் அவரது ஐ திரைப்படத்திலிருந்து தொடங்கியது.
ஐ , ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த, சாதாரண கதையம்சம் கொண்ட அந்த திரைப்படத்தால் அது சரி வர பூர்த்தியாகவில்லை. இதனைத் தொடர்ந்து, இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கினார் சங்கர். இதற்கான பணிகள் மட்டும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தன. பின்னர் பெரும் எதிர்பார்ப்பில் இந்த திரைப்படம் வெளியாக, அது படு தோல்வியை சந்தித்தது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்ற சங்கர், ராம் சரணை வைத்து கேம் சேஞ்ச் என்னும் திரைப்படத்தை இயக்கினார். இதுவும் ஷங்கரின் திரையுலக பயணத்தில் சோகமாகவே அமைந்தது. இப்படியான சூழலில் வேள்பாரி நூலின் வெற்றி விழா நடைபெற அதில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய சங்கர், எனது முதல் கனவு திரைப்படம் எந்திரன் என்றும், இரண்டாவது படம் வேள்பாரி எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் சங்கர் சாரின் கனவு கை கூடும் என்று வேள்பாரி நாவலை எழுதிய சு வெங்கடேசன் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.





