தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 2005ம் ஆண்டில் துவங்கிய அவர் அரசியல் களத்திலும் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றார். சட்டசபை எதிர்கட்சி தலைவராகவும் 2011ம் ஆண்டில் வெற்றி பெற்றார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் நடிகர் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியல் களத்தில் உள்ளார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஏற்கனவே விருதுநகரில் எம்பி தேர்தலிலும் அவர் தோல்வியை சந்தித்தவர். நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
சகாப்தம் மதுரவீரன் படை தலைவன் கொம்பு சீவி ஆகிய 4 படங்களில் சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார். ஆனால் விஜயகாந்த் அளவுக்கு அவரால் பெரிய அளவில் சினிமாவில் சாதிக்க முடியவில்லை. நட்சத்திர நடிகராக இன்னும் முன்னணிக்கு வரவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சண்முக பாண்டியன் கூறியதாவது, உங்கள் அண்ணன் விஜயபிரபாகரன் அரசியலுக்கும் நீங்கள் சினிமாவுக்கும் வந்தது ஏன் என்ற கேள்வி அவர் கூறியதாவது, எதையும் நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை. சிறுவயதில் அண்ணன் சற்று கூடுதல் எடையுடன் இருந்தார். எடையை குறைத்து விட்டு சினிமாவில் நடிக்க யோசித்து இருக்கலாம். அதனால் முதலில் நான் சினிமாவுக்கு வந்தேன்.
திடீரென அப்பாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அண்ணன் அரசியலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குழந்தைகளுக்கு படிப்பு முக்கியம். கல்லூரி படிப்பு முடியும் வரை மகன்களுக்கு சினிமா ஆசை வந்து கூட கூடாது என்பதில் அப்பா தெளிவாக இருந்தார். குழந்தை நட்சத்திரமாக நடிக்க எங்களுக்கு சில வாய்ப்புகள் வந்தன. பெரியண்ணா படத்தில் கூட அண்ணனை நடிக்க கேட்டார்கள்.
ஆனால் அது வேண்டாம். படிப்பை தொந்தரவு செய்யக்கூடாது என்று அப்பா மறுத்துவிட்டார். ஆனால் நான் அதிகம் படிக்கவில்லை. அப்பா நடித்த படப்பிடிப்புகளுக்கு சென்று இருக்கிறேன். மற்றபடி எங்களுக்கு அவர் சினிமா ஆசையை வளர்க்கவில்லை. பிறகு நான் வளர்ந்தவுடன் சகாப்தம் படத்தில் ஹீரோ ஆக்கினார். சினிமாவில் அவர்தான் எனக்கு குரு என்று நடிகர் சண்முக பாண்டியன் கூறியிருக்கிறார்.





