தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் சிம்பு என்கிற சிலம்பரசன். எஸ்டிஆர் என்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். 1 வயதில் தனது அப்பா டி ராஜேந்தர் இயக்கிய படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு 40 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் நிறைவு செய்திருக்கிறார். இதுவரை அவரது நடிப்பில் 48 படங்கள் வெளியாகி உள்ளன.
காதல் அழிவதில்லை படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சிம்பு தொடர்ந்து பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தார். மன்மதன் வல்லவன் சரவணா ஒஸ்தி மாநாடு குத்து தம் செக்கச் சிவந்த வானம் கோவில் வெந்து தணிந்தது காடு விண்ணைத் தாண்டி வருவாயா என சிம்பு நடித்த பல படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.
ஆனால் சமீபகாலமாக நடிகர் சிம்பு தன்னை வைத்து படம் இயக்க வரும் தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்காரணமாகவே பல படங்களில் சிம்பு நடிக்க கமிட் ஆகி பிறகு, அந்த படத்தில் இருந்து அவர் விலகி விடுவதாகவும் கோலிவுட்டில் தகவல்கள் பரவி வருகின்றன. தொடர்ந்து வெற்றிப் படங்கள் தரும் மற்ற நடிகர்கள் போல, நடிகர் சிம்பு ரூ. 50 கோடி வரை சம்பளமாக கேட்பது இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை விரக்தியடைய செய்கிறது.
குறிப்பாக நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க ரூ. 50 கோடி வரை சம்பளம் வாங்கும் நிலையில் தனது சம்பளமும் அதுவாக இருக்க வேண்டும் என்று நடிகர் சிம்பு விரும்புகிறார். ஆனால் தனுஷ் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து வருகிறார். இயக்குனராக தயாரிப்பாளராக ஜெயித்து வருகிறார். கடந்தாண்டில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது இட்லி கடை படமும் அக்டோபரில் ரிலீஸாக உள்ளது.
நடிகர் சிம்பு நடிக்க வந்த பிறகு நடிக்க வந்த சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்கள் பெரிய சம்பளம் வாங்குகின்றனர். அதனால் தனது சம்பளமும் அதிகமாக இருக்க வேண்டும் என்று சிம்பு விரும்புகிறார். ஆனால் அதே நேரத்தில் சினிமாவில் மார்க்கெட் நிலவரம் என்னவோ அதை பொறுத்துதால் ஹீரோக்களின் சம்பளத்தை கொடுக்க முடியும் என்பது தயாரிப்பாளர்களின் தரப்பு நியாயமாக உள்ளது.
தக்லைஃப் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்துக்கு முதலில் 10 கோடி ரூபாய் சம்பளம், பிராபர்டி ஷேர் கேட்ட சிம்பு, இப்போது 30 கோடி ரூபாய் சம்பளத்தில் முன்பணம் கேட்டுள்ளார். அதனால் இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 125 கோடிக்கு மேல் எகிறும் என்பதால் இந்த படத்தையே கைவிடும் நிலையில் தயாரிப்பாளர் தாணு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பளத்தை குறி வைக்காமல் வெற்றிப் படங்களை சிம்பு குறிவைத்து நடித்தால் நல்லது என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.





