தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சிங்கம்புலி. காமெடி நடிகராக அறிமுகமான அவர் உண்மையில் இன்ஜினியரிங் படித்த ஒரு இயக்குனர் ஆவார். இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு இயக்குநர் சுந்தர் சி-யிடம் துணை இயக்குனராக வேலை செய்த அவர் அஜித்தின் உன்னை தேடி படத்திற்காக கதையும் எழுதியுள்ளார்.
அதன் பிறகு படிப்படியாக வளர்ந்த அவர் 2002-ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் “ரெட்” படத்தையும், 2005-இல் வெளியான சூர்யாவின் “மாயாவி” போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். அதன் பின்னர் தற்போது காமெடியனாகவும், குணசித்திர நடிகராகவும் மாறி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் அண்மையில் அவரது நடிப்பில் வெளியான “மகாராஜா” படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு ஈர்ப்பினை பெற்றிருந்தது. தற்போது பல்வேறு படங்களில் நடித்து வரும் அவர் சினிமா நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அந்த வகையில் அக்ஷயா மூவி மேக்கர் சார்பில் ஈ நடராஜ் தயாரிப்பில் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்க் என்கிற திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் அவருடன் ஆர்.வி உதயகுமார், பேரரசு, சரவண சுப்பையா போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அந்த இசை வெளியீட்டு விழாவில் சிங்கம்புலி பேசும்போது சொன்ன விடயங்கள் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் கூறியதாவது :
நான் போட்டோ ஸ்டூடியோவில் பிலிம்களை டெவலப் செய்யும் டார்க் ரூமில் தான் ஆறு மாதம் தங்கியிருந்தேன். அங்கு ஒன்றுமே பார்க்க முடியாது. லைட் கூட போட மாட்டார்கள். சின்ன சிவப்பு விளக்கு மட்டும்தான் எரிந்து கொண்டிருக்கும். எந்த பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது. அந்த அளவுக்கு சிரமப்பட்டு தான் சினிமாவுக்கு வந்துள்ளேன். அப்படி நான் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டதால் தான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்.
அதே போன்று கதாநாயகன் தமன் வெளிநாட்டில் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவர் அதையெல்லாம் விட்டுவிட்டு தற்போது சினிமாவின் மீது இருக்கும் விருப்பத்தால் நடிக்க வந்துள்ளார். எனவே நிச்சயம் அவரை சினிமா கைவிடாது. சினிமாவை நேசிக்கும் அனைவரையும் சினிமா வாழ வைக்கும் என்று சிங்கம்புலி பேசியது குறிப்பிடத்தக்கது.





