எப்போதுமே நல்ல கதையம்சம் கொண்ட நல்ல கதைக்களத்தில் உருவான படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் அலட்சியப்படுத்தியது இல்லை. அங்கே நட்சத்திர ஹீரோக்கள் நடிக்க வேண்டிய தேவையில்லை. கதையில் வரும் அவர்கள் கேரக்டர்களாக மட்டும் பிரதிபலித்தால் போதும். அந்த படம் சூப்பர் ஹிட் ஆகி விடும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை.
அப்படி தான் குட்நைட் குடும்பஸ்தன் பார்க்கிங் காக்கா முட்டை லப்பர் பந்து டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற பல சின்ன பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அந்த படங்களை ரசிகர்கள் கொண்டாட ஒரே காரணம் அந்த படத்தின் கதையும் திரைக்கதையும் தான். வெறும் பிரமாண்டங்களும் நட்சத்திர வேல்யூ மட்டுமே ஒரு படத்தை ஹிட் ஆக்கிவிட முடியாது.
அந்த வகையில் இந்த ஆண்டில் டிசம்பர் 25ம் தேதி வெளியான படம் சிறை. இந்த படம் ஆண்டின் இறுதியில் வந்தாலும் ரசிகர்களின் மனதில் முதலிடம் பெற்றுவிட்டது. 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வந்த மிகச்சிறந்த படங்களின் வரிசையில் சிறை படமும் ஒரு முக்கிய இடத்தை பிடித்து விட்டது.
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. இந்த படம் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. நடிகர் சிவாஜி கணேசனின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் என்ற அடையாளங்களை கடந்து ஒரு நல்ல கலைஞராக தன்னை நிலைநாட்ட நடிகர் விக்ரம் பிரபு தொடர்ந்து போராடி வருகிறார்.
இதுவரை நடிகர் விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி இறுகப்பற்று டாணாக்காரன் லவ் மேரேஜ் போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது சிறை படமும் அவரது பெயரை பேசுகிறது கடந்த டிசம்பர் 25ம் தேதி அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சிறை படம் வெளியானது. இந்த படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் அறிமுக நடிகர் அக்சய் குமாரும் நடித்துள்ளனர். மேலும் நடிகை அனிஷ்மா அனில் குமார் நாயகியாக நடித்திருக்கிறார். சிறை படத்திலும் போலீஸ் கேரக்டரில் விக்ரம் பிரபு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரமான நிலையில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறை படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பில் எஸ்எஸ் லலித்குமார் தயாரித்துள்ளார். சின்ன பட்ஜெட் படம் இவ்வளவு பெரிய வெற்றியை வரவேற்பை வசூலை 7 நாட்களில் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறை படத்தில் நடித்துள்ள அக்ஷய் குமார் தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.





