சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் படத்தின் டிரைலர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் நகைச்சுவையை மட்டுமே தனது ஆயுதமாக கொண்டு படங்களை இறக்கி வந்தவர் சிவகார்த்திகேயன். இதன் மூலம் அவர் வெற்றியும் பெற்று தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் குடி புகுந்தார்.
இதன் பிறகு நகைச்சுவையை மெல்ல மெல்ல கைவிட்டு ஆக்சன் ஹீரோவாக மாறும் முயற்சியை சிவகார்த்திகேயன் கையில் எடுத்தார். ஆனால் அந்த சமயங்களில் இது அவருக்கு சறுக்கலைதான் கொடுத்தது. தொடர் தோல்வி படங்களை கொடுத்திருந்த சிவகார்த்திகேயனுக்கு, திருப்புமுனையாக அமைந்தது டாக்டர் திரைப்படம்.
நெல்சன் இயக்கத்தில் டார்க் காமெடியாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின், சிவகார்த்திகேயனுக்கு மிகவும் அமைதியான கதாபாத்திரமே கொடுக்கப்பட்டிருந்தது. முதல்முறையாக அவரது திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இதன் பிறகு, டான் திரைப்படமும் அவருக்கு வெற்றியை கொடுத்தது.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடிப்பதற்கே ஆர்வம் காட்டி வந்த சிவகார்த்திகேயன், மண்டேலா பட இயக்குனர் மடோனா அஸ்வினுடன் கைகோர்த்து மாவீரன் திரைப்படத்தை கொடுத்தார். இது வழக்கமான கதை தான் என்றாலும் அதன் திரைக்கதை முற்றிலும் வித்தியாசமாக இருந்ததால், மாவீரனுக்கு மக்கள் பச்சை கொடி காட்டினர்.
தற்போது சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். போரில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ரங்கூன் படத்தை எடுத்த ராஜ்குமார் பெரியசாமி தான் இதனை இயக்கியிருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.
இப்படியான சூழலில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக கச்சிதமாக பொருந்தி இருப்பது இந்த ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது. படத்தின் விஷுவல்களும், அதன் மேக்கிங்கும் நன்றாக இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். முக்கியமாக சிவகார்த்திகேயனுக்கும் சாய் பல்லவிக்கும் இடையேயான காதல் காட்சிகளும் அழகாக படமாக்கப்பட்டுள்ளன. ராணுவ வீரராக கர்ஜிக்கும் சிவகார்த்திகேயன் நிச்சயம் தீபாவளிக்கு வெற்றியை பரிசாக அளிப்பார் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





