நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம், கடந்த 12ம் தேதி ரிலீஸ் ஆனது. ஆறு ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு இந்த படம் திரைக்கு வந்தது. இந்த படத்துக்காக சம்பளம் வாங்காமல் நடித்த சிவகார்த்திகேயன், கடைசி நேரத்தில் ரூ. 27 கோடி கொடுத்து படம் வெளியாக காரணமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருப்பூரைச் சேர்ந்த இயக்குநர் ரவிக்குமார் டைரக்ட் செய்த இன்று நேற்று நாளை படத்தை பார்த்து அசந்து போன சிவகார்த்திகேயன், அவராக அழைத்துதான், அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பை ரவிக்குமாருக்கு கொடுத்தார். ஏனெனில், அறிவியல் பூர்வமான டைம் டிராவல் கதையை, மிக எளிமையாக யதார்த்தமாக அந்த படத்தில் கொண்டு வந்திருந்தார் ரவிக்குமார்.
தனது முதல் படத்திலேயே இவ்வளவு சிக்கலான ஒரு கதையை, எளிமையான திரைக்கதையாக்கி, ரசிகர்கள் கொண்டாடும் விதமான ஒரு படமாக தருவது, சாதாரண ஒரு இயக்குநரால் முடியாத விஷயம். பல விதங்களிலும் நுணுக்கமான ஒரு யதார்த்த படைப்பாளியால்தான் இது சாத்தியமாகும் என்பதால், ரவிக்குமாரை மிக திறமைசாலியாக ஏற்றுக் கொண்டு தனது படத்தை இயக்க வாய்ப்பளித்தார்.
அயலான் படத்தை பொருத்தவரை, டெக்னிக்கல் ரீதியாக அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக விஎப்எக்ஸ் தொழில்நுட்பக்குழு அசத்தியிருக்கிறது. திரைக்கதையில் சில சொதப்பலும், இடைவேளைக்கு பிறகு படத்தில் நிறைய தொய்வுகளும் இருந்தாலும், இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு முழு திருப்தியளித்த படமாக உள்ளது.
எந்த ஹீரோவும் தான் நடித்த படத்தை வெறுக்கப் போவது இல்லை. ஆனால் ரசிகர்களுக்கும் அந்த படம் திருப்தியளித்தால் வெற்றி என்ற நிலையில், அயலான் படம் பலருக்கும் ஏமாற்றத்தை தான் தந்தது. ஏனெனில் படத்துக்கும், ரசிகர்களுக்கும் கனெக்ட் ஆகவில்லை. ஏலியன் மீது ரசிகர்கள் தோழமை கொள்ளும் விதமாக அந்த ஏலியன் ரசிகர்களுக்குள் வரவில்லை. இதனால் ஏலியன் யாரோ என்பது போன்ற மனநிலையை தான் ரசிகர்களுக்கு தந்தது. இதில் மட்டும் இயக்குநர் ஜெயித்திருந்தால் இந்த படம் வேற லெவலில் இருந்திருக்கும்.
படத்தின் தயாரிப்பு செலவில், பாதியை கூட வசூலிக்காத என்ற நிலையில்தான் இப்போது சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமாருடன் சேர்ந்துக்கொண்டு தமிழ்நாட்டில் அயலான் திரையிட்ட தியேட்டர்களுக்கு விசிட் செய்து வருகிறார். இதன் மூலமாக, ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். அதே நேரத்தில் மீண்டும் ரவிக்குமாருடன் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் இணைகிறார். பெரிய வெற்றி, பெரிய வரவேற்பு அயலானுக்கு கிடைக்கவில்லை என்றாலும், ரவிக்குமாரின் நட்பே பிரதானம் என்பதால் அவருக்காக மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார். ஆனால் அது அயலான் 2 அல்ல என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.





