சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் அமரன் திரைப்படம் வசூல்மழை குவித்து வருகிறது. தற்போது வரை 250 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த திரைப்படம் 200 கோடியை சம்பாதித்தது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே மிக அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக உருவாகி இருக்கிறது அமரன். இதற்கு முன்னதாக அவர் நடித்த டான், டாக்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் பார்த்திருந்தன.
பெரிய பெரிய நடிகர்கள் அதாவது சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் இன்னும் 200 கோடி ரூபாய் வசூல் என்னும் சாதனையை ஈட்டாத நிலையில், அதனை தொட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். சொல்லப்போனால் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் வரிசையில் சிவகார்த்திகேயன் இணைந்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.
இப்படி சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் அதிரிபுதிரியான வெற்றியை கொடுக்க, அடுத்ததாக அவர் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் மறுபடியும் கைகோர்த்து இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது. இது எந்த மாதிரியான கதை அம்சம் கொண்ட திரைப்படம் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. படத்தில் நடிக்கும் பிற கதாபாத்திரங்களையும் இப்போது வரை சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்குப் பிறகு அவர் புறநானூறு படத்தில் நடிக்கிறார். முதலில் இதற்கான கதையை சூர்யாவுக்கு தான் கூறியிருந்தார் சுதா கொங்கரா. அது நடக்காமல் போக தற்போது சிவகார்த்திகேயனுக்கு அந்த கதையை கூறி இருக்கிறார். இதில் சிவகார்த்திகேயனின் சகோதரனாக நிவின் பாலி நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தான் சிவகார்த்திகேயன், ஹெச் வினோத்திடம் கதை கேட்டிருக்கிறாராம். அது அவருக்கு மிகவும் பிடித்துப் போனதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த இரண்டு திரைப்படங்களையும் முடித்துவிட்டு அவர் வினோத் உடன்தான் சேர்வார் என்று பேசிக்கொள்கிறார்கள். இதனிடையே சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விரைவில் வெளியாகிறது.





