ஆரம்பத்தில் ஏப்ரல் மாதத்தில் சிவகாசி உன்னை சரணடைந்தேன் போன்ற சில படங்களில் நடித்த கங்கை அமரன் மகன் வெங்கட்பிரபுவுக்கு பெரிய வரவேற்பும் ஆதரவும் ரசிகர்களிடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு சென்னை 28 படத்தை இயக்கி இயக்குனராக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். தொடர்ந்து சரோஜா கோவா மங்காத்தா போன்ற படங்களை இயக்கினார்.
கடைசியாக விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் படத்தை இயக்கினார். அது 2024ம் ஆண்டு தி கோட் வெளியானது. வணிக ரீதியாக ரூ. 445 கோடி வசூலித்தாலும் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்துக்கு பிறகு அஜீத்குமார் படம் ஒன்றை இயக்க வெங்கட்பிரபு முயற்சி செய்தார். ஆனால் அஜீத்குமார் தரப்பில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்தார்.
இந்நிலையில் பராசக்தி படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிப்பதாக ஒப்பந்தமாகி இருந்தார். இது நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய போதே முடிவானது. அதனால்தான் தி கோட் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கேமியோ ரோலில் விஜயுடன் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
ஆனால் இப்போது தாய்கிழவி படத்தை சொந்தமாக தயாரித்த சிவகார்த்திகேயன், அந்த படத்தை பார்த்து அசந்து விட்டார். அதனால் தனது அடுத்த படத்தை இயக்கும் ஒரு வாய்ப்பை தாய்கிழவி இயக்குனர் சிவக்குமார் முருகேசனுக்கு அளித்துவிட்டார். இந்த படத்துக்கு சேயோன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் சேயோன் படத்துக்காக 80 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சேயோன் படத்தில் நடித்த முடித்தபிறகு பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அதனால் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த சயன்ஸ்பிக்சன் படம் டிராப் ஆகி விட்டதாக தெரிகிறது. இந்த படம் வேண்டாம் என்று முடிவுக்கு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டது.
இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டில் சிவகார்த்திகேயனுக்கு முழு திருப்தி இல்லை. கதை முழுமையாக புரியவில்லை. குழப்பமாக உள்ளது என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். மேலும் படத்தின் பட்ஜெட்டும் அதிகம் என்று தயாரிப்பு நிறுவனமும் கருதியால் இந்த படம் கைவிடப்பட்டது. இதற்காக 3 ஆண்டுகளாக காத்திருந்த வெங்கட்பிரபுவுக்கு பை பை சொல்லி சிவகார்த்திகேயன் ரூட்டை மாற்றி விட்டார். வெங்கட்பிரபுவின் நிலமை தான் பரிதாபமாக மாறிவிட்டது.





