எஸ் ஜே சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் வில்லனாக தொடர்ந்து நடித்து வந்தாலும் ஆரம்பத்தில் அவர் இயக்குனர் பயணத்தை தான் தொடங்கினார். பல இயக்குனர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த அவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது வாலி. அந்த அரிய வாய்ப்பை கொடுத்தவர் நடிகர் அஜித்குமார் என்பது பலருக்கும் தெரியும்.
அஜித் குமார் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் அது. தம்பி மனைவி மீது சலபம் கொள்ளும் அண்ணனின் கதை. சிறிது மிஸ் ஆனாலும் பிசிறு தட்டிவிடும் இந்த திரைப்படத்தின் கதையை, மிகவும் நுணுக்கமாக எடுத்து பாராட்டைப் பெற்றார் எஸ் ஜே சூர்யா. அஜித் குமாரை வேறொரு தளத்திற்கு இந்த திரைப்படம் அழைத்துச் சென்றது.
இப்படி முதல் திரைப்படத்திலேயே சிக்சர் அடித்த எஸ் ஜே சூர்யா அடுத்ததாக விஜயை வைத்து குஷி திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தில் எந்த ஒரு இயக்குனரும் செய்யாத புதுமையை காட்டினார் சூர்யா. ஆமாம் படத்தின் டைட்டில் சென்ற உடனேயே அதற்கான கதையை எஸ் ஜே சூர்யா கூறிவிடுவார். கதாநாயகியும் கதாநாயகனும் இணையப் போவது தான் கதை ஆனால் அது எப்படி என்பதை தான் பார்க்கப் போகிறோம் என்று சுவாரசியமாக ஓபன் செய்து விடுவார்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் திரைப்படங்கள் வந்தாலும் குஷிக்கு என ஒரு தனி இடம் இருக்கும். அப்படி ஒரு அட்டகாசமான படம் அது. இதன் பிறகு நியூ திரைப்படத்தை இயக்கினார். முதலில் இந்த திரைப்படத்தில் அஜித் குமார் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு விஷயங்களால் அவர் படத்தில் இருந்து விலக கதையை மாற்றி அமைத்து எஸ் ஜே சூர்யாவே ஹீரோவாக நடித்தார்.
இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனரை ஓரங்கட்டி விட்டு முழுக்க முழுக்க நடிகர் ஆனார் எஸ் ஜே சூர்யா. ஆனால் ஆரம்பத்தில் அவரது இந்த முடிவு தவறாகவே அமைந்துவிட்டது என்று கூறலாம். அவர் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படங்களும் சரியாக செல்லவில்லை. பிறகு தனது பாதையை மாற்றிக் கொண்டு வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.
இது சரியாக ஒர்க் அவுட் ஆக, தமிழ் திரைப்படத்தை தாண்டி தெலுங்கு கன்னட மொழிகளிலும் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த முறை படத்தை தயாரித்து நடித்து இயக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். கில்லர் என இதற்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறதாம். கார்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாகவும், காதல் ஆக்சன் மற்றும் காமெடி திரைப்படமாக இது இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.





