தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். குறுகிய காலத்தில் அபரிமிதமான ஒரு வளர்ச்சியை தமிழ் சினிமாவில் கண்டவர் எஸ்கே என்றால் அது மிகையல்ல. அதே நேரத்தில் தனக்கான கதைகள் தேர்வு, கேரக்டர்கள் அயராத உழைப்பு விடாமுயற்சி திறமையும் இவையெல்லாம் அவருக்கு பக்கபலமாக இருந்தன.
கடந்தாண்டில் வெளியான அமரன் படம்தான் சிவகார்த்திகேயனுக்கு நட்சத்திர அந்தஸ்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. ஜாலியான காமெடி கேரக்டர்ஸ் மற்றும் காதல் கதைகளில் நடித்து வந்த அவரை அமரன் படம்தான் வேற லெவலுக்கு கொண்டு சென்றது. காமெடி ஹீரோ ஸ்டார் ஹீரோவாக மாறியது இந்த படத்தில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் உலக அளவில் ரூ. 325 கோடி வரை வசூல் சாதனை செய்தது அமரன் படம் மட்டுமே. அதன்பிறகு எஸ்கேவின் சம்பளமும் ரூ. 70 கோடி வரை உயர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும், அதே நேரத்தில் கோலிவுட்டில் தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை தரும் ஒரு நட்சத்திரமாகவும் எஸ்கே தெரிகிறார்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி வெளியான படம் மதராஸி. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் அதகளம் செய்திருந்தார். கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாகவும் துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜாம்வால் வில்லனாகவும் நடித்திருந்தனர். இந்த படம் இதுவரை ரூ. 90 கோடி வரை வசூலில் நெருங்கிவிட்ட நிலையில், பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி ரூபாய் லிஸ்ட்டில் இணைய அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் அமரன் படம் போல மதராஸி படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை ஆதரவை பெறவில்லை. கலவையான விமர்சனங்களே இந்த படத்துக்கு கிடைத்தது. துப்பாக்கி ஏழாம் அறிவு கஜினி படங்களின் கலவையாக மதராஸி இருந்ததாக பலரும் விமர்சித்தனர். வசூல் ரீதியாகவும் அமரன் போல மதராஸி படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை வாரி வழங்கவில்லை.
இந்த சூழலில் எதிர்மறை விமர்சனங்கள் மதராஸி படத்துக்கு கிடைத்தாலும் மீண்டும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் மதராஸி படம் ஷூட்டிங் நடந்த போதே இருவரும் இதுகுறித்து பேசி விட்டதாகவும் அதனால் மீண்டும் இருவரும் ஒரு படத்தில் விரைவில் இணைவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் ஏஆர் முருகதாஸூடன் எஸ்கே இணைவது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.





