தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. அருணாசலம் அன்பே சிவம் உள்ளத்தை அள்ளித்தா முறைமாமன் மேட்டுக்குடி அரண்மனை வின்னர் மதகஜ ராஜாஎன அவர் இயக்கிய ஏராளமான படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்துள்ளன.
இயக்குனராக மட்டுமின்றி பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தவர் சுந்தர் சி. அவர் நடிகராகவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என சினிமாவில் கலக்கி வருகிறார். இப்போது அரசியல்வாதியாகவும் களத்தில் குதித்திருக்கிறார்.
ஏற்கனவே சுந்தர் சி மனைவி குஷ்பூ பாஜக மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறார். இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கும் நிலையில் இந்த கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் இயக்குனர் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்.
சுந்தர் சி இந்த தொகுதியில் முன்னாள் திமுக அமைச்சர் பிடிஆர் என அழைக்கப்படும் பழனிவேல் ராஜனை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அதிமுக திமுக இடையே தான் போட்டி என்று ஆரம்பத்திலேயே கூறிய வேட்பாளர் சுந்தர் சி, தவெக குறித்தும் விஜய் குறித்தும் பிரசாரத்தில் எதுவும் பேச மாட்டேன். அது அவசியமும் இல்லை என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் மதுரையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி பேசியதாவது, ஜெயிக்க முடியாமல் போறதுக்கு அவர் என்ன புரட்சித் தலைவர் எம்ஜிஆரா? பிடிஆர் தானே? வாங்க பார்த்துவிடலாம்.
திமுக ஒன்றும் அசைக்க முடியாத பலமான கட்சி எல்லாம் இல்லை. திமுகவின் பலமே அவங்களை பலமாக இருக்கிற மாதிரி காட்டிப்பாங்க. அப்படி பலமாக இருந்தால் எதுக்கு 24 கட்சியோட கூட்டணி வைக்கணும்? கூட்டமா இருக்கிறது எல்லாம் கூட்டணி இல்லை. கூடி இருப்பதுதான் உண்மையான கூட்டணி என்று சுந்தர் சி அதிரடியாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





