பத்து தல திரைப்படத்திற்கு பிறகு சிம்புவுக்கு அடுத்த திரைப்படம் இன்னும் வெளிவரவே இல்லை. அவரை திரையரங்குகளில் பார்த்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அடுத்த மாதம் சிம்பு நடிப்பில் தக் லைப் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் அதில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் படமாக அது எடுக்கப்பட்டிருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அண்மையில் அந்த திரைப்படத்திலிருந்து வெளிவந்த ஜிங்குச்சா பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இப்படியாக தக் லைப் திரைப்படத்தை, கமல்ஹாசன், சிம்பு தரப்பு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவுக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் வரிசை கட்டி இருக்கின்றன. இதில் அவரது ஐம்பதாவது திரைப்படத்தை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி. ஏற்கனவே இவருடன் சிம்பு இணைவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பெரிய அளவில் பட்ஜெட் திரைப்படம் என்பதால் அதன் பணிகள் தள்ளி வைக்கப்பட்டன.
தற்போது இந்த கூட்டணி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை சிம்புவே தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அவரின் 51வது திரைப்படத்தை இயக்குகிறார் அஷ்வந்த் மாரிமுத்து. அண்மையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த டிராகன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், இந்தக் கூட்டணி மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதன் நடுவே சிம்புவின் 49 ஆவது திரைப்படமும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பார்க்கிங் திரைப்படத்தை எடுத்து பாராட்டைப் பெற்ற ராம்குமார் பாலகிருஷ்ணன் இதனை இயக்குகிறார். Dawn பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. கதாநாயகியாக கயாடு லோகர் வருகிறார்.
இதில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது சந்தானம் இடம்பெற்றிருப்பதுதான். படத்தில் கல்லூரி மாணவராக கலக்கல் ஆக வரவிருக்கிறார் சிம்பு. விண்டேஜ் சிம்புவை இதில் பார்க்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். பக்கா கமர்சியலாக எடுக்கப்படும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படியான சூழலில் இதன் பட பூஜை இன்று விமர்சையாக நடைபெற்றது. இதில் சிம்பு கயாடு லோகர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





