தமிழ் சினிமாவில் இப்போதைக்கு அதிக வசூல் படங்களை தந்த இயக்குனராக உச்சத்தில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய லியோ படமும் கூலி படமும்தான் இப்போது தமிழ் சினிமாவில் நெம்பர் 1 வசூலில் ஜெயித்து சாதித்து காட்டியிருக்கின்றன. கூலி படத்துக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அந்த படம் 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
இதையடுத்து ரஜினி கமல் மீண்டும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்வதும் முடிவாகி விட்டது. 46 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு சிகரங்கள் இணையும் ஒரு அற்புதமான படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜூக்கு அமைந்துவிட்டது. அதனால் லோகேஷ் கனகராஜ் தனது சம்பளத்தை ரூ. 50 கோடியில் இருந்து ரூ. 75 கோடியாக இப்போது உயர்த்தி இருக்கிறார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் கைதி படம் மாஸ் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து கைதி 2 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் இப்போது 190 கோடி ரூபாய் என வந்திருக்கிறது. இதில் லோகேஷ் கனகராஜ் சம்பளம் ரூ. 75 கோடி என்ற நிலையில், நடிகர் கார்த்தி மற்றும் வில்லனாக நடிக்கும் நடிகர் சூர்யா சம்பளம் என அதுவே 150 கோடி வரை அதிகரித்து விடும்.
அதே நேரத்தில் மற்றொரு விஷயமும் இதில் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் மாநகரம். இந்த படத்தை தயாரித்தது டிரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனம்தான். அதே நிறுவனம்தான் கைதி படத்தையும் தயாரித்தது. இப்படி இயக்குனராக லோகேஷ் கனகராஜூக்கு வாய்ப்பளித்தே, அறிமுகம் செய்ததே டிரீம் வாரியர் நிறுவனம்தான்.
அந்த நிறுவனம் தயாரிக்கும் கைதி 2 படத்துக்கு லோகேஷ் கனகராஜ் 75 கோடி ரூபாய் சம்பளம் கேட்கலாமா, தன்னை வளர்த்து விட்ட நிறுவனத்திடமே தனது சம்பளத்தை இப்படி உயர்த்தி கேட்பது நியாயமா என்ற சர்ச்சை இப்போது எழுந்துள்ளது. அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு சினிமா மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கிறது. வியாபாரமும் அதிகமாக நடக்கிறது.
அதனால்தான் லோகேஷ் கனகராஜ் தனது சம்பளத்தை இப்படி உயர்த்தி கேட்கிறார். அவர் இயக்குனராக அறிமுகப்படுத்திய தயாரிப்பு நிறுவனம் என்பதற்காக அவர் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் கூலி படத்துக்கு அமோகமான வசூலுக்கு காரணம் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் அல்ல, ரஜினி என்னும் அந்த மந்திரச் சொல்தான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.





