ராஜ்கிரண் – மீனா நடித்த என் ராசாவின் மனசிலே படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. பின், நகைச்சுவையில் அவரது நடிப்பு ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போக, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து, நகைச்சுவையில் நம்பர் ஒன் இடத்துக்கு வந்தார். இப்போதும், தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிப்பில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் வடிவேலு தான்.
வடிவேலு நடித்த படங்களில் நகைச்சுவை காட்சிகளில், ஒரு கட்டத்துக்கு பிறகு மற்ற சில காமெடி நடிகர்களையும் துணைக்கு சேர்த்துக் கொண்டார். அவர்களுடன் நடித்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் ஹிட் ஆனது. இதுதவிர, ஹீரோக்களுடனும் தனியாக நகைச்சுவை காட்சிகளில் நடித்தும், ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
நடிகர் வடிவேலு உடன் நடித்த துணை நடிகர்களில் சிங்கமுத்து, தம்பி ராமையா, நெல்லை சிவா, சிசர் மனோகர், கிரேன் மனோகர், செல்லதுரை, பெஞ்சமின், போண்டா மணி, அல்வா வாசு, முத்துக்காளை என பல நடிகர்கள் இருந்தனர். இந்த கூட்டணியில் இருந்துதான் புதிய புதிய காமெடி காட்சிகள் உருவாகி, ரசிகர்களின் மனங்களை வென்றது. இவர்களில் நெல்லை சிவா, செல்லதுரை, அல்வா வாசு போன்றவர்கள் மறைந்து விட்டனர்.
இந்நிலையில். சமீபகாலமாக வடிவேலுவுடன் நடித்த சில காமெடி நடிகர்கள் பொதுவெளிகளில், நேர்காணல்களில் வடிவேலு குறித்த பல குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். வடிவேலு, மற்ற காமெடி நடிகர்களை வளரவிடாமல் தடுத்ததாக குற்றம் கூறுகின்றனர். ஆனால், வடிவேலுவுடன் நடித்தவர்களில் ஒருவர் மட்டும், வடிவேலுவின் குணம் அறிந்து வந்து, தன் திறமையை வெளிப்படுத்தி இன்று முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்து விட்டார்.
வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த தம்பி ராமையா, வடிவேலுவை ஹீரோவாக வைத்து, இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தை இயக்கினார். அதில் சில காட்சிகளை பார்த்த படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், அந்த காட்சிகளை வெட்டிவிடுமாறு, கூறினார். அதை ஹீரோ வடிவேலு ஏற்கவில்லை. ஆனால், படத்தில் இயக்குநர் தம்பி ராமையா அந்த காட்சிகளை வெட்டி விட்டார்.
இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில், வடிவேலுவை விட்டு விலகிய தம்பி ராமையா பல படங்களில் காமெடி காட்சிகளில் தனியாக நடித்தார். கும்கி, கொம்பன், அப்பா, சாட்டை போன்ற படங்களில் அசத்தினார். இன்னும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இன்று, பெயர் சொல்லும்படியான ஒரு நிலையான இடத்தில், தமிழ் சினிமாவில் தம்பி ராமையா இருக்கிறார். இல்லா விட்டால், அவரும் மற்ற துணை நடிகர்களை போல, புலம்பும் நிலை ஏற்பட்டிருக்கும்.





