நடிகர் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஆர் ஜே பாலாஜி. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. அண்மையில் இதற்கான பட பூஜை பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் சூர்யாவை தவிர்த்து திரிஷா, லப்பர் பந்து பட நாயகி சுவாசிகா, மலையாள நடிகர் இந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இது போக படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தை ஆர் ஜே பாலாஜி ஒதுக்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தான் எப்போதும் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க போவதில்லை என்று விஜய் சேதுபதி ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் அவர் படத்தில் நடிப்பது சந்தேகம்தான் என்று சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு எந்த ஜோடியும் கிடையாது. அதேசமயம் படம் ஃபேண்டஸி கலந்த ஆன்மீக திரைப்படமாக உருவாகுவதாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் படத்தின் மையக்கதைகளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது படத்தில் சூர்யா மற்றும் திரிஷா இருவரும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் தான் வருகிறார்களாம்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு கோவிலை சுற்றி தான் இதன் கதை நகர்கிறதாம். ஒரு முக்கியமான வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தின் கண்ணோட்டம் மற்றும் கோவிலின் கண்ணோட்டத்தை மையப்படுத்தியே இதன் கதையை ஆர்ஜே பாலாஜி எழுதியிருக்கிறாராம். அது மட்டுமல்ல வழக்கில், சூர்யாவும் திரிஷாவும் எதிரெதிர் தரப்பு வாதங்களை முன்வைப்பார்க்கலாம்.
இப்படி படம் முழுக்க முழுக்க நீதிமன்ற கதை சார்ந்து நகர்வதால் நிச்சயம் அதில் அழுத்தமான வசனங்களும், ஆழமான கருத்துக்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த திரைப்படத்திற்கு முதலில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அவர் சிறிது காலம் ஓய்வில் இருப்பதாக தெரிவித்த சூழலில் தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.





