சூர்யா தற்போது தனது 45 வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி இதனை இயக்கி வருகிறார். படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக வருகிறார் திரிஷா. இது போக லப்பர் பந்து சுவாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், நட்டி யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள்.
இது ஆன்மீகம் கலந்த பேண்டஸி படமாக எடுக்கப்படுகிறது. கோயில் விவகாரம் தொடர்பான வழக்கு தான் படத்தின் கதை கரு என்று கூறப்படுகிறது. படத்தில் வழக்கறிஞராக சூர்யா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதேபோல் த்ரிஷாவும் வக்கீல் கதாபாத்திரத்தில் தான் வருகிறாராம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. பிறகு சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் இதன் காட்சிகளை படமாக்கினார்கள். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்ஜே பாலாஜி வருவதாகவும் சொல்லப்படுகிறது. முதலில் இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைப்பதாக இருந்தது.
பிறகு பல்வேறு காரணங்களால் அவர் விலகிய நிலையில் அந்த இடத்திற்கு வந்தார் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். அவர்தான் தற்போது படத்திற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இதுபோக, சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பதால் அதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் நாசர் என கவனிக்கத்தக்க நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். பூஜா ஹெக்டே படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சூர்யா தனது அடுத்த திரைப்படத்திற்காக தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ளார். ஏற்கனவே லக்கி பாஸ்கர் வெற்றியின் மூலம் உற்சாகத்தில் இருக்கும் வெங்கி, சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இந்தியாவில் முதல் இன்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் நிலையில், அதற்கான பணிகள் துபாயில் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





