நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படமான அனிமல் படத்தில், மிரட்டிய பாபி தியோல்தான் கங்குவா படத்தின் முக்கிய வில்லனாம். இதில் கதாநாயகியாக திஷா பதானி நடித்திருக்கிறார். யோகி பாபு, கோவை சரளா, நட்டி, ஜெகபதிபாபு உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர்.
சூர்யா நடித்த திரைப்படங்களின் மிகப் பிரமாண்டமான செலவில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. வரலாற்று பின்னணியில் முந்தைய பிறவி தொடர்பான களத்தை இந்த திரைப்படம் முடிச்சு போடும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் நிறைவு பெற்றுள்ள சூழலில், அதற்கான போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த திரைப்படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிக்க இருக்கிறார். பீரியாடிக் திரைப்படமாக உருவாகும் இதில், மொழி திணிப்புக்கு எதிராக கதைக்களம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் சூர்யாவுடன் நஸ்ரியா துல்கர் சல்மான் விஜய் வர்மா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். டிசம்பர் மாதமே இதன் சூட்டிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தற்போது அது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
விரைவில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கும் என்றும், மதுரை, திருச்சி, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் இதன் சூட்டிங் பணிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது. ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான பாடல்களுக்கு இசையமைக்கும் பணியில் ஜிவி பிரகாஷ் ஈடுபட்டிருக்கிறார். அவரது நூறாவது திரைப்படமாக இது உருவாகிறது. இப்படியான சூழலில் நடிகர் சூர்யா பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் ஓம் பிரகாஷ் இயக்கத்தில், வரலாற்றுக் கதையான கர்ணன் பட கதையில்தான் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளும் தொடங்கி விட்டதாம். மிகப் பிரமாண்டமாக இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாதத்திலேயே ஒரு பத்து நாட்கள் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க இயக்குனர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோக இயக்குனர் ஷங்கர் அடிக்கடி கூறிக் கொண்டிருக்கும் வேள்பாரி நாவலுக்கான பட சூட்டிங் விரைவில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம்தான் இந்த திரைப்படத்தை தயாரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு கோலிவுட் பக்கம் எழுந்துள்ள ஒரே கேள்வி, முதலில் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பாரா அல்லது வேள்பாரியில் நடிப்பாரா என்பதுதான். விரைவில் அவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.





