தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையன்று இந்த படம் வெளியானது. அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அஜீத்குமார் படம் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் அஜீத்குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் முடிவடைந்துள்ளது. அந்த படம் அடுத்ததாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.
குட்பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தில் நடந்த நிலையில், அடுத்தக்கட்டமாக விறுவிறுப்பாக ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இங்கு 50 நாட்களுக்கு தொடர்ச்சியாக ஷூட்டிங் நடக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கிறார். இது நடிகர் அஜீத்குமாருக்கு 63வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குட்பேட் அக்லி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் பிரசன்னா குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து நடிகர் பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட் பேட் அக்லி படம் குறித்தும் நடிகர் அஜீத்குமார் குறித்தும் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் நடிகர் பிரசன்னா கூறியிருப்பதாவது, நான் அஜீத் குமாருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.
அவருடன் நடிக்க எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் கடைசி நிமிடத்தில் அந்த வாய்ப்புகளை எல்லாம் சில காரணத்திற்காக நான் இழந்துள்ளேன். தற்போது அந்த கனவு பலித்து விட்டது. ஆம், நான் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறேன். என்னுடைய சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அதற்கு மேல் என்னால் தற்போது இது குறித்து தகவலை பகிர முடியாது.
நாம் அனைவரும் நினைப்பது போல் அஜீத்குமார் மிகவும் இயல்பான, பணிவான குணத்தை கொண்டவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று நடிகர் பிரசன்னா அதில் பதிவிட்டுள்ளார். நடிகர் பிரசன்னா நடிகை சினேகாவின் கணவர். சமீபத்தில் சினேகா தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மனைவி சினேகா விஜய் படத்தில் நடித்த நிலையில், இப்போது அவரது கணவர் பிரசன்னா அஜீத்குமார் படத்தில் நடிக்கிறார்.





