தொடர்ந்து தோல்வி திரைப்படங்களையே கொடுத்து வந்த சூர்யாவுக்கு சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இந்த இரண்டு திரைப்படங்களும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற சூர்யாவுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தன. ஆனால் அடுத்தடுத்து வெளியான இந்த இரு காவியங்களும், திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு குறையாக இருந்தது.
இதன் பிறகு எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யா நடித்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக அவர் சிறுத்தை சிவாவின் கங்குவா திரைப்படத்திற்கு மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இந்த திரைப்படம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. மிகப் பெரும் தொகையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதன் காரணமாக கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அடுத்தடுத்த திரைப்படங்களை விரைவாக கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டார். இதன் விளைவாக தனது 45 வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் ஒப்படைத்தார் சூர்யா. ரெட்ரோ என டைட்டில் வைக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 4 மாதங்களில் முடிக்கப்பட்டது.
இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக வருகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்தவராக நடித்திருக்கிறார் சூர்யா. அவருக்கு பாரிவேல் கண்ணன் எனும் கதாபாத்திரத்தை கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருக்கிறார். ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோரும் படத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள்.
வரும் ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் அதற்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் ரெட்ரோ படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, நான் திரைப்படத்தை பார்த்து விட்டேன். நிச்சயம் இது உங்களுக்கு பிடிக்கும். எனது முந்தைய திரைப்படங்கள் அனைத்திலும் இருந்து இது வித்தியாசமானதாக இருக்கும். ஒரு நல்ல திரையரங்கு அனுபவத்தை ரெட்ரோ திரைப்படம் கொடுக்கும் என்று கூறி இருக்கிறார்.





