தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு துணிவு படம் வெளியானது. இந்த படம் வெளியான போது, விஜய் நடித்த வாரிசு படமும் ரிலீஸ் ஆனது. 2 படங்களுமே பெரிய அளவில் வரவேற்பு பெற்று வசூலை குவித்தன.
அதன்பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜீத்குமார் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வந்தார். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில், திரிஷா கதாநாயகியாக நடித்தார். மேலும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் அர்ஜூன் மற்றும் ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்தனர்.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தின் ஓடிடி டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில், அஜர்பைஜானில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் இடையிடையே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் நடத்தப்பட்டது.
இதனால் பல மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பு நீடித்தது. விடாமுயற்சி படத்திலிருந்து இதுவரை பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட மூன்று போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் அஜர்பைஜனில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும், தொடர்ந்து ஐதராபாத்தில் விடாமுயற்சி படத்தின் மீதி காட்சிகள் படம்பிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஓராண்டு ஆகியும் இன்னும் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகாதது அஜீத் ரசிகர்களை பெரிய அளவில் வருத்தமடைய செய்துள்ளது.
அதிலும் விஜய் நடித்த வாரிசு படமும் அஜீத்குமார் நடித்த துணிவு படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில், அதன் பிறகு விஜய் நடித்த லியோ படம் கடந்த ஆண்டு வெளியானது. நடப்பாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் விஜய் நடித்த தி கோட் படமும் வெளியானது. ஆனால் அஜீத்குமார் ரசிகர்களுக்கு இன்னும் அஜீத் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் தீபாவளிக்கு விடாமுயற்சி படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, அதிலும் பலத்த ஏமாற்றமே மிஞ்சியது.
எப்படியும் தீபாவளிக்கு விடாமுயற்சி டீசர் வெளியாகும் என்று எதிர்பார்த்த அஜீத்குமார் ரசிகர்களுக்கு அதுவும் வெளியாகவில்லை என்று உறுதியாகி விட்டது. வருகிற நவம்பர் 10ம் தேதி விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு துவங்கி ஓராண்டு கடந்து விட்டது. இன்னும் டீசர் வெளியாக 10 நாட்கள் ஆகுமா என்று ரசிகர்கள் நொந்து போய், அட போங்கப்பா என்று விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றனர்.





