ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த்துக்கு அடுத்ததாக லால் சலாம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால் விக்ராந்த் தம்பி ராமையா செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்னும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம், கடந்த ஒன்பதாம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் முதல் பாதி சுமாராக இருப்பதாகவும், இரண்டாம் பாதி நன்றாக உள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் எதிர்பார்த்ததை விட படம் நன்றாக இருப்பதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில் தனது வேட்டையன் திரைப்படத்திலும் ரஜினிகாந்த் கவனம் செலுத்தி வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் படத்தை எடுத்த ஞானவேல் இயக்கியுள்ளார். இதில், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார். இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் 80 சதவீதம் நிறைவடைந்து இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இதற்கான ஒன்லைன் கதையை லோகேஷ் கனகராஜ் ரஜினியிடம் கூற, அது சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்துப் போனதால், அதற்கான பணிகள் ஆரம்பமாகின. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கப் போகிறார்கள் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் படத்திற்கான, திரைக்கதையை உருவாக்கும் பணியில் புதிய குழுவை அமைத்து ஈடுபட்டு வருகிறார். ஆனால் இந்தக் கதை அமைப்பு பணிகள் ரஜினிகாந்தை கவரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்காக லோகேஷை அழைத்த ரஜினிகாந்த், ஆக்சன் காட்சிகளை குறைவாக வைக்க கூறி இருக்கிறார். ஏற்கனவே லியோ திரைப்படத்தில், அவர் ஆக்சன் காட்சிகளை அதிகம் பயன்படுத்திய இருப்பதாகவும், போதைப் பொருட்களுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் நபர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். லோகேஷ் கனகராஜை உளவியல் ரீதியாக சோதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனை விசாரித்த நீதிமன்றம், புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட பட குழுவினர் பதிலளிக்க உத்தரவிட்டது.
இப்படி லோகேஷ் கனகராஜ்-க்கு ஒரு புறம் நெருக்கடி ஏற்பட்டு வரும் சூழலில், ரஜினிகாந்த் ஆக்சன் காட்சிகளை குறைக்க கூடியிருப்பது திரைத்துறையில் பேசு பொருளாகியுள்ளது. அதேசமயம் இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே பேசி இருந்த லோகேஷ் கனகராஜ், படத்தில் போதை பொருட்கள் சம்பந்தமான காட்சிகள் இருக்காது என்று உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





