கோட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் கடைசியாக தனது 69 ஆவது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று திரைப்படங்களை கொடுத்த ஹெச் வினோத் தான் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
அரசியலுடன் கமர்சியல் கலந்த திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் கதை முதலில் விஜய் சேதுபதியிடம் வினோத் கூறியதாக தெரிகிறது. பிறகு கமலிடம் இந்த கதையை வினோத் கூறியிருக்கிறார். உலக நாயகனும் இதற்கு சம்மதம் தெரிவிக்க படத்திற்கான அறிவிப்பு வெளியானது.
அதில் கையில் தீப்பந்தத்துடன் கமல் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. ஆனால் திடீரென இந்த கூட்டணி பிரிந்தது. அதற்கான காரணம் என்னவென்றே தெரியவில்லை. இப்படியான சூழலில் கமலிடம் சென்று கைவிடப்பட்ட கதையைத்தான் விஜயை வைத்து வினோத் எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே வி என் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மலையாள நடிகை மமீதா பைஜூவும் படத்தில் இடம்பெற்று இருக்கிறார். அனிமல் திரைப்படத்தின் மூலம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த பாபி தியோல் தான் இந்த படத்தின் வில்லன்.
இதுபோக நரேன், இயக்குனர் கௌதம் மேனன், நடிகை பிரியாமணி உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். அரசியலில் தீவிரமாக களமிறங்கப் போகும் விஜய் இதுதான் தனது கடைசி திரைப்படம் எனக்கூறிவிட்டதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்திருக்கிறது.
இப்படியான சூழலில் தான், படத்திற்கான முதல் பாடலை தற்போது எடுத்து முடித்திருக்கிறார் வினோத். விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் இந்த திரைப்பட பாடலின் படப்பிடிப்பு, நூறு நடன கலைஞர்களுடன் சேர்ந்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோட் படத்தில் மட்ட பாடலுக்கு மாஸ்டராக இருந்த சேகர் தான் இந்தப் பாடலுக்கும் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு, நவம்பர் மாதம் ஆரம்பிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.





