மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகராக மட்டுமின்றி அரசியல் தலைவராகவும் தமிழக மக்கள் மத்தியில் பெரிய வெற்றியை பெற்றவர். சிறந்த நடிகர் நல்ல தலைவர் என்பதையும் தாண்டி எம்ஜிஆர் என்றால் அவர் ஒரு தர்ம பிரபு. வாரி வழங்கும் வள்ளல். கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் மனம் படைத்த மனிதநேயம் மிக்கவர். பொன்மனச் செம்மல் என்றெல்லாம் மக்களால் கொண்டாடப்பட்டவர்.
அதனால்தான் அவர் இந்த மண்ணை விட்டு மறைந்து 36 ஆண்டுகள் கடந்தும் இன்னும் எம்ஜிஆர் என்ற சொல் மந்திரமாக அரசியல் களத்தில் ஒலிக்கிறது. இன்னும் அவரது புகழ் மங்காமல் மக்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட எம்ஜிஆர் வாழ்க்கையில் அவர் சின்ன பையனாக இருந்த போது நடந்த ஒரு சம்பவம்தான் இது.
எம்ஜிஆர் சிறுவயதில் இருந்த போது தினமும் காலை வீட்டுக்கு அருகே உள்ள ஒரு மூதாட்டியிடம் சென்று காலணா கொடுத்து புட்டு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருவார். அதை அவரும் அண்ணன் சக்ரபாணி அம்மா சத்யா மூன்று பேரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். தினமும் அவர்கள் இப்படி காலையில் புட்டு வாங்கி வந்து சாப்பிடுவது வழக்கமாக நடந்தது.
ஒரு நாள் புட்டு வாங்க காசு இல்லாத நிலையில் எம்ஜிஆர் புட்டுக்கடைக்கு சென்று இருக்கிறார். காசு இல்லாமல் அவர் தயங்கி நிற்பதை பார்த்த அந்த புட்டுக்கடை மூதாட்டி, டேய் ராமச்சந்திரா உனக்கு என்ன ஆச்சு? தினமும் காலணா புட்டு வாங்குவியே? ஏன் இப்படி தயங்கி நிக்கறே? என்று கேட்டிருக்கிறார்.
இன்னைக்கு என்கிட்ட காசு இல்லே அம்மா என்று எம்ஜிஆர் கூறியிருக்கிறார். நீ புட்டு எடுத்துட்டு போ. காசு அப்புறமா கொடு என்று மூதாட்டி பரிவாக சொல்லி இருக்கிறார். அதற்கு, நான் காசு கொடுக்காமல் இந்த ஊரைவிட்டு போய் விட்டால் என்ன பண்ணுவீங்க என்று எம்ஜிஆர் கேட்டிருக்கிறார்.
அதற்கு மூதாட்டி, டேய் ராமச்சந்திரா நீ காசு கொடுத்தா அதை வியாபார கணக்குல எழுதுவேன். நீ காசு கொடுக்கலேன்னா அதை புண்ணிய கணக்குல எழுதுவேன் போடா என்று விளையாட்டாக சொல்லி இருக்கிறார். இப்படி அந்த புட்டு விட்டு மூதாட்டியிடம் வியாபார கணக்கு புண்ணிய கணக்கு பற்றி பாடம் கற்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பின்னாளில் பெரிய புண்ணியவானாக வாழ்ந்து காட்டினார்.





