இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டில் வெளியான படம் மௌனம் பேசியதே. இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிகைகள் திரிஷா லைலா மற்றும் நந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மௌனம் பேசியதே படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். காதலர் தினத்தை முன்னிட்டு நாளை 14ம் தேதி இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
சமீபத்தில் நடிகர் சூர்யா இந்த படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவங்களை ஒரு வீடியோவில் பேசி வெளியிட்டு இருந்தார். இப்போது நடிகை திரிஷாவும் தனது வலைதள பக்கத்தில் இந்த படம் குறித்து ஒரு வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார். அதில் நடிகை திரிஷா கூறியிருப்பதாவது, என்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே நாளை 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.
கண்டிப்பாக எல்லோரும் தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பாருங்கள். காதலர் தின வாரத்தில் வெளியாவதால் இந்த படம் ஸ்பெஷல் ஆக உள்ளது. எப்போதுமே இந்த படம் எனக்கு ஸ்பெஷலான படம்தான். ஏனென்றால் இந்த படத்தில் இருந்து தான் எனக்கு எல்லாமே துவங்கியது.
என்னுடைய முதல் சினிமாவில் அமீருடன் பணியாற்றியதை சந்தோஷமாக பார்க்கிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன். என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படத்தின் கருப்பு படம் ரிலீஸ்சும் சூர்யாவுடன் தான் நடக்கப் போகிறது.
இதிலிருந்து ஒரு வட்டத்திற்குள் நான் வந்துள்ளதாகவே உணர்கிறேன். யுவன் சங்கர் ராஜாவின் இசை இன்றளவும் பாப்புலராக பேசப்படுகிறது. லைலாவுடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். படத்தை பாருங்கள். என்ஜாய் பண்ணுங்கள் என்று நடிகை திரிஷா அந்த வீடியோவில் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.
மௌனம் பேசியதே படம்தான் நடிகை திரிஷா அறிமுகமான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இயக்குனர் அமீர் முதல் முதலாக இயக்கிய படமும் மௌனம் பேசியதே படம்தான். அதன்பிறகு தான் அவர் கார்த்தி பிரியாமணி நடித்த பருத்தி வீரன் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





