கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை விஜய் தொடங்கினார். அப்போதே திரைத்துறையில் இருந்து அவர் ஓய்வு பெற இருப்பதாகவும் இனி முழுக்க முழுக்க அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவருக்கு சினிமா துறையில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியானது.
தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் அதில் விஜய் நடித்திருந்ததால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு இல்லை. கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் வசூலில் இந்த திரைப்படம் சாதனை படைத்ததாகவே சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது தனது கடைசி திரைப்படம் ஆன ஜனநாயகனில் நடித்து வருகிறார் விஜய். ஹெச் வினோத் இதனை இயக்குகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமீதா பைஜூ உள்ளிட்ட பெண் நட்சத்திரங்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.
விஜயின் கடைசி திரைப்படம் என ஜனநாயகன் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதன் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை குறி வைத்தே பொங்கலுக்கு திரைப்படத்தை படக்குழு இறக்குகிறது. இது ஒரு பக்கம் இருக்க விஜயின் பழைய திரைப்படங்களையும் தற்போது ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தை இதற்கு நாம் ஒரு உதாரணமாக கூறலாம்.
பல்வேறு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்தது. கிட்டத்தட்ட ஐம்பது கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்கிறார்கள். இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடித்திருந்த சச்சின் திரைப்படமும் ரீரிலிஸ் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அஜித்குமாருக்கு குட் பேட் அக்லி வெளியாகி இருந்த நிலையில், தளபதி ரசிகர்கள் சச்சின் திரைப்படத்தையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இப்படியான சூழலில் தற்போது மீண்டும் விஜயின் இரண்டு திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. குஷி மற்றும் சிவகாசி ஆகிய இரண்டு திரைப்படங்களும்தான் வெளியிடப்பட இருக்கிறதாம். இரண்டு திரைப்படங்களின் தயாரிப்பாளரான, ஏ எம் ரத்னம் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த திரைப்படங்கள் எப்போது வெளியிடப்படுகிறது என்ற தகவல் வெளியாகவில்லை.





