விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி துவங்கியது. மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் இப்போது 6 பேர் மட்டுமே வீட்டுக்குள் இறுதிக்கட்ட போட்டியாளர்களாக உள்ளனர். சௌந்தர்யா ஜாக்குலின் விஷால் ரயான் முத்துக்குமரன் மற்றும்
பவித்ரா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
ஆனால் இந்த 8வது சீசனில் பங்கேற்ற மற்ற போட்டியாளர்களும் இப்போது வீட்டுக்குள் சிறப்பு அழைப்பாளர்களாக வரவழைக்கப்பட்டு அவர்களும் உடன் இருக்கின்றனர். அவர்கள் டாஸ்க்குகளில் கலந்துக்கொள்ளாமல், இறுதி போட்டியாளர்களாக உள்ள அந்த 6 பேரை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 2 தினங்களுக்கு பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த 7 சீசன்களாக பணப்பெட்டியை எடுப்பவர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது டாஸ்க் ஆக இருந்தது. ஆனால் இந்த முறை அதில் பிக்பாஸ் மாற்றம் செய்திருக்கிறார்.
குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் பணப்பெட்டியை குறித்த வினாடிகளுக்குள் ஓடிச்சென்று போட்டியாளர்கள் எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்துவிட வேண்டும். அப்படி வந்துவிட்டால் அந்த பணமும் அவருக்கு சொந்தம். வீட்டுக்குள் மீண்டும் போட்டியாளராக தொடரலாம். ஒருவேளை டாஸ்க்கில் தோற்றுவிட்டால், பணமும் சொந்தமில்லை. போட்டியில் இருந்தும் வெளியேற்றப்படுவார் என்பதே புதிய விதிமுறை.
அந்த வகையில் போட்டியாளர் முத்துக்குமரன், ரூ. 50 ஆயிரம் பணப்பெட்டியை எடுத்துவிட்டார். அடுத்து ரயான் ரூ. 2 லட்சம் பணப்பெட்டியை எடுத்து வந்துவிட்டார். தொடர்ந்து பவித்ராவும் ரூ. 2 லட்சம் பணப்பெட்டியை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த டாஸ்க்கில் ஜாக்குலினும் பங்கேற்றதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் 4 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுக்கச் சென்ற போட்டியாளர் ஜாக்குலின், குறித்த நேரத்துக்குள் வீட்டுக்குள் ஓடிவர முடியாமல் போட்டியில் தோற்று விட்டதாகவும், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா, வதந்தியா என்பது இன்று உறுதியாகி விடும். எனினும் ஜாக்குலின் முக்கிய போட்டியாளர் என்பதால் அவர் எலிமினேட் ஆவது பார்வையாளர்களுக்கு பலத்த ஏமாற்றம் தருகிறது.





