காமெடி நடிகர் அல்வா வாசுவின் சொந்த ஊர் மதுரை. ஏழ்மையான குடும்பம். உணவுக்கே திண்டாட்டமான நிலைதான். எனினும் வாசு படிப்பில் கெட்டி. இசை ஆர்வமும் மிக அதிகம். கிடார் மீது ஆசைகொண்டு கிடார் வாசிக்கப் பயின்றார். ஒருகட்டத்தில் கிடார் அவரின் விரல்கள் விளையாடின. கைகளால் பெஞ்சில் தாளம் போட்டால், நண்பர்களின் கால்கள் ஆட்டம்போடும் அளவுக்கு இசையைக் காதலித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரில் எம்.காம் படிக்கும்போது மியூசிக் என்றால் வாசுதான் என நண்பர்கள் பாராட்டினார்கள்.
கல்லூரியில் எம்.காம் படிப்பை முடித்து பட்டம் பெற்ற பின்பு இசையமைப்பாளர் கனவுடன் வாசு சென்னைக்கு பஸ் ஏறினார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. கையில் கிடாருடன் அவர் ஏறாத சினிமா அலுவலகம் இல்லை. அந்த நேரத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராகச் சேர்ந்திருக்கிறார். இசையமைக்கும் கனவு நிறைவேறாததால் இயக்குனர் ஆக வேண்டும் என்று முடிவு செய்தார். அன்று இருந்த பல ஆயிரம் உதவி இயக்குநர்கள் பட்டியலில் கவனிக்கப்படும் ஒரு மனிதராக வலம் வந்தார். வண்டிச்சக்கரம் என்ற படத்தில் ஒரு சீனில் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்க முதல்முறையாக திரையில் முகம் காட்டினார் வாசு.
அடுத்து அமைதிப்படை படத்தில் உதவி இயக்குனராகவும் அதில் நடிக்கவும் செய்தார். அதில் ஹீரோ சத்யராஜூக்கு அல்வா வாங்கிக் கொடுப்பது போன்ற ஒரு காட்சியில் நடித்தார். அந்தக் காட்சிக்கு பிறகு அவரது வாசு என்ற பெயருக்கு முன்னால் அல்வா வந்து ஒட்டிக்கொண்டது. அப்போது முதல் சினிமா துறையில் ‘அல்வா’ வாசு என்று அவர் அழைக்கப்பட்டார். அதன் பிறகு மணிவண்ணன் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக வேலைசெய்தார். சில படங்களுக்குத் தனியே காமெடி ஸ்க்ரிப்ட் எழுதினார்.
கையில் பல கதைகளை வைத்துக்கொண்டு ஏறாத தயாரிப்பாளர்கள் அலுவலகம் இல்லை. இசையமைப்பாளர் ஆகும் கனவை போலவே இயக்குனராகும் கனவும் பொய்த்துப் போனது. எனினும் காமெடியனாக துணை நடிகராக தனது திரைப் பயணத்தைத் தொடர்ந்தார். அப்படித்தான் நடிகர் வடிவேலுவின் நட்பு கிடைத்தது. பல படங்களிலும் அவரின் கூட்டாளிகளில் ஒருவராக நடித்தார்.
கருப்பசாமி குத்தகைதாரர் எல்லாம் அவன் செயல் தாஸ் கந்தசாமி போன்ற பல படங்களில் வடிவேலுவுடன் சேர்ந்து அசத்தினார்.விசாரணை படத்தில் ஆந்திராவில் மளிகைக்கடை நடத்தும் நபராக நடித்தார். இப்படி 900 படங்களுக்குமேல் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். உடல்மொழியிலோ, பேச்சிலோ கொஞ்சம்கூட செயற்கைத்தனம் இல்லாமல் நடிப்பதுதான் அல்வா வாசுவின் மிகப்பெரிய ப்ளஸ் ஆக இருந்தது.
இசையமைப்பாளர் கனவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த வாசுவை 36 ஆண்டுகள் சுழற்றி சுழற்றி அடித்த தமிழ் சினிமா, பொருளாதார நெருக்கடியாலும் உடல்நிலை காரணத்தாலும் மீண்டும் மதுரைக்கே திருப்பி அனுப்பிவிட்டது. ரசிகர்களுக்கு நல்ல இசை கொடுக்க வந்த அவரை தமிழ் சினிமா அல்வா கொடுக்க செய்து விட்டது. அவருடைய கனவுகள் எதுவும் நனவாகாமல் 2017ம் ஆண்டு அவர் மறைந்து விட்டார். ஒரு நல்ல கலைஞன் திறமைகள் இருந்தும் வாய்ப்பில்லாததால் ஜொலிக்க முடியாமல் போய்விட்டார்.





