லைகா புரடக்சன் தயாரிப்பில் கடந் 5 மாதங்களாக அஜீத்குமார் நடிப்பில் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடக்காமல் பிரேக் விட்டு விட்டு நடத்தப்பட்டது. அதற்கு காரணம் அஜர்பைஜானில் அடிக்கடி ஏற்பட்ட கனமழை, மணல் புயல், பனிப்பொழிவு, அதிக குளிர் போன்ற பிரச்னைகள்தான்.
இதற்கிடையே படப்பிடிப்பை துவங்கிய சில வாரங்களில், படத்தின் கலை இயக்குநர் மிலன் காலமானார். அதுவும் படக்குழுவினரை அப்செட் ஆக செய்தது. மேலும், படத்தின் ஒளிப்பதிவாளர், அஜீத்குமாரின் நெருங்கிய நண்பர் நீரவ் ஷா மாற்றப்பட்டு, ஓம்பிரகாஷ் நியமிக்கப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த படப்பிடிப்பை தொடர்ச்சியாக நடத்த விடாமல், அஜர்பைஜானில் உள்ள தொழிலாளர் சட்ட விதிமுறைப்படி வாரத்தில் 5 நாட்கள் வேலை, 2 நாட்கள் விடுமுறை என்ற விதிமுறையை கொண்டு வர அங்குள்ள அதிகாரிகள் படக்குழுவுக்கு வலியுறுத்தினர். ஏனெனில், அங்குள்ள தொழிலாளர்களும் விடாமுயற்சி படப்பிடிப்பில் வேலை செய்தனர். பின், 7 நாட்களுக்கு ஒருநாள் படப்பிடிப்பில் தொழிலாளர் விடுமுறை கொண்டுவரப்பட்டது.
விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்கியது முதல், அடிக்கடி பிரேக்கப் விட்டு படக்குழு சென்னை திரும்பியதும், மீண்டும் அஜர்பைஜான் சென்று படப்பிடிப்பை துவங்குவதும் என அலைக்கழித்த நிலையில், படத்தை தயாரித்த லைகா புரடக்சன் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏகப்பட்ட செலவுகள் ஏற்பட்டது. சில நாட்களில் படப்பிடிப்பு நடக்காமலேயே தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் தர வேண்டிய சூழலும் உருவானது.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக விடாமுயற்சி படப்பிடிப்பு நடக்காத நிலையில், இனி சில மாதங்களுக்கு விடாமுயற்சி படம் சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் வேண்டாம். படம் அப்படியே இருக்கட்டும். மற்றொரு படமான வேட்டையன் படப்பிடிப்பை மட்டுமே கவனித்து, அந்த படத்தை விரைவாக முடிக்கிற முடிவுக்கு லைகா தயாரிப்பு நிறுவனம் வந்துள்ளது. ஏனெனில் ஒரே நேரத்தில் 2 பெரிய படங்களை தயாரிப்பதால், பைனான்ஷியல் பிராப்ளம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால், வேட்டையன் படத்தை கூடிய சீக்கிரம் முடித்து அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். அந்த படத்தின் மூலம் கிடைக்கிற வருமானத்தை வைத்து, விடாமுயற்சி படத்தை பிறகு விட்ட இடத்தில் இருந்து படப்பிடிப்பை துவங்கி, பிறகு அந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு லைகா நிறுவனம் வந்துவிட்டது. வேட்டையன் ரிலீஸ் ஆனால்தான், விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. அதனால் விடாமுயற்சி அப்டேட் குறித்து ரசிகர்கள் சிந்திக்காமல், அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





