எப்போதுமே ஒரு கதையை சொல்ல ஆரம்பிக்கும் போது ஒரு ஊரில் ஒரு அப்பா அம்மா இருந்தாங்க என்றுதான் பேரன் பேத்திகளுக்கு, பாட்டிமார்கள் கதை சொல்ல ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் சினிமாவிலும் அப்படிதான். ஒரு படத்தின் கதையை சொல்லும்போதே படத்தின் நாயகனை தொடர்ந்து நாயகி யார் என்பதும் ரசிகர்கள் அறிய வேண்டிய விஷயமாக இருக்கிறது.
ஆனால் வயதான சீனியர் நடிகர்கள் ஹீரோக்களாக நடிக்கும் போது சில படங்களில் கதாநாயகிகள் இருப்பது இல்லை. ஆனால் கேமிரோ ரோல் அல்லது கெஸ்ட் ரோலில் ஒரு சீனியர் நடிகர் நடித்தால் சில காட்சிகளில் மட்டுமே வந்தால் அவரது கேரக்டர் கருதி அவருக்கு ஜோடி இல்லாமல் காட்டி விடலாம். அப்படி பல படங்களில் நடந்திருக்கிறது.
கடைசியில் ஒரு புகைப்படத்துக்கு மாலையிட்ட காட்சியை கொண்டு வந்து, அவரது மனைவி கேரக்டர் மறைந்து விட்டதாக கூட காட்டி சில இயக்குனர்கள் சமாளித்து விடுகின்றனர். ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் தங்களது படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தராமல் கதைகளை உருவாக்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
கைதி படத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லை; அந்த படத்தில் பாடல் காட்சியும் இல்லை. அதே போல் விக்ரம் படத்திலும் கமலுக்கு ஜோடி இல்லை. மாஸ்டர் லியோ படங்களில் விஜய் ஹீரோ என்பதால் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன், திரிஷாவை நடிக்க வைத்தார். இப்போது கூலி படத்தில் நாயகன் ரஜினிகாந்த் தான். ஆனால் அவருக்கு ஜோடியாக யாரும் நடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தை பொருத்த வரை பெண்களும் குழந்தைகளும் என குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனில் குழந்தைகள் பெண்கள் விரும்பும் ஒரு நடிகராகவும் ரஜினி இருந்து வருகிறார். ஏற்கனவே கூலி படத்துக்கு ஏ சான்றிதழ் தந்த வகையில், இந்த படத்தை பார்க்க பெண்களும் குழந்தைகளும் வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிச்சயமாக இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் படம் முழுக்க ரத்த களறியாக வன்முறை காட்சிகள் இருக்கும் என்பதால்தான் சென்சார் போர்டு ஏ சான்று வழங்கியுள்ளது. வெறும் அடிதடி வன்முறை காட்சிகளை கொண்ட படமாக கூலி இருப்பது ஒரு பின்னடைவுதான். அதிலும் ரஜினிக்கு ஜோடி இல்லாததும் பெரிய குறையாக தான் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.





