கோயம்புத்தூரை அடுத்துள்ள ஊட்டி கோத்தகிரியைச் சேர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. டாக்டரான இவர் பிரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒரு முன்னணி நடிகை அளவுக்கு பெயரும் புகழும் பெற்றார்.
ஆனால் தனக்கு மிகவும் பிடித்தமான கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதை சாய் பல்லவி வழக்கமாக கொண்டிருக்கிறார். அதனால் மிகவும் குறைந்தபட்ச படங்களிலேயே அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் கேரக்டரில் சாய் பல்லவி நடித்திருந்தார்.
ராணுவ அதிகாரியின் மனைவியாக, அந்த கேரக்டரில் சாய் பல்லவி வாழ்ந்திருக்கிறார். இந்த படத்தில் நடித்ததற்காக சாய்பல்லவிக்கு தேசிய விருது கிடைத்தால் கூட அது தகுதியானதாக தான் இருக்கும் என்று சினிமா ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அந்தளவுக்கு அமரன் படத்தில் சாய் பல்லவி நடிப்பு அழுத்தமாக அமைந்திருக்கிறது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சாய் பல்லவி, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படத்தில் நடித்த போது அந்தப் படத்தில் இருந்து விலக நினைத்ததையும், அந்த நேரத்தில் நடிகர் தனுஷ் அவரை தடுத்தது குறித்தும் சாய் பல்லவி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து சாய்பல்லவி கூறுகையில், நான் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் என் ஜி கே படத்தில் நடித்தேன். படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்த துவக்க நாட்களில், ரொம்பவும் ஒரு சிரமமான சூழ்நிலையாக உணர்ந்தேன்.காரணம் இயக்குனர் செல்வராகவன் நான் நடித்த காட்சிகளை படமாக்கியதும், நான் நன்றாக நடித்திருக்கிறேனா, இல்லையா என்பது பற்றி எந்த கருத்துமே சொல்லாமல் இருந்து விடுவார். இதனால் சில நாட்களில் இந்த படத்தில் இருந்து நடிக்காமல் வெளியேறி விடலாமா என்றது என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது
அப்போது நடிகர் தனுஷ் என்னிடம் என்ஜிகே சூட்டிங் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று விசாரித்தார். அப்போது அவரிடம் நான் என் மனதில் இருந்த விஷயத்தை வெளிப்படையாக கூறினேன். அதற்கு தனுஷ், இதற்கெல்லாம் வருத்தப்பட வேண்டியதில்லை. செல்வா அண்ணன் நம்மை இப்படித்தான் டெஸ்ட் பண்ணுவார். நீ அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து நடி என்று கூறினார். அதன் பிறகு பாசிடிவ் எனர்ஜியுடன் நடித்தேன். நடிகர் சூர்யாவும் அப்போது எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார் என்று சாய் பல்லவி கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





