நடிகர் ரஜினிகாந்த் இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. இன்னும் சில வாரங்களில் புரடக்சன் பணிகள் துவங்க உள்ளன. இதைத்தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் ரஜினி 171 படப்பிடிப்பை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.
ரஜினி 171 படத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், ஜீவன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும், கதாநாயகியாக நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த தகவலுமே உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த படத்தில் ஷாருக்கான் ரன்பீர் சிங் போன்ற பாலிவுட் நடிகர்கள் யாரேனும் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் டைட்டில் வெளியிட, லோகேஷ் முடிவு செய்திருந்தார். ஆனால் அதே நாளில் நடிகர் விஜய் நடித்து வரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாவதாக அறிவித்துள்ளதால், அந்த நேரத்தில் ரஜினி பட டைட்டிலை வெளியிட வேண்டாம் என, ஏப்ரல் 22ம் தேதி, அதாவது ஒரு வாரம் கழித்து டைட்டிலை வெளியிட இருக்கிறார்.
முதலில் எல்லாம் எந்த நடிகர் நடிக்க இருப்பதாகவும் படத்தின் பெயரை முதலில் சொல்லிய பிறகுதான் மற்ற விஷயங்களையே பேசுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் வரை கூட டைட்டிலை சொல்வதில் ரகசியம் காக்கிறார்கள். இதனால் என்ன பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி விடப் போகிறது எனத் தெரியவில்லை. படம் டைட்டிலுக்காக ஓடாது. கதை நன்றாக இருந்தால் தானாகவே ஓடிவிடும்.
இப்போது ரஜினி 171 படத்தின் டைட்டில் கழுகு என்று வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. கழுகு என தமிழிலோ அல்லது ஈகிள் என ஆங்கிலத்திலோ இந்த பெயர் வைக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால் ஏற்கனவே கழுகு என்ற படத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் ரஜினியே ஹீரோவாக நடித்திருக்கிறார். நடிகர் கிருஷ்ணா, கருணாஸ், தம்பி ராமையா நடிப்பில், 10 ஆண்டுகளுக்கு முன்பும் கழுகு என்ற படம் வந்துள்ளது.
ஏற்கனவே காக்கா- கழுகு கதை சொன்ன வகையில், அது பெரிய விவகாரமாகி விஜய் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, இப்போதுதான் அடங்கியுள்ளது. இந்த நிலையில் கழுகு என பெயர் வைத்து, விஜய் ரசிகர்களை லோகேஷ் கனகராஜ் சீண்டுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கழுகு, குருவி, சிங்கம், புலி, கிடா, மைனா, ஈ, எறும்பு என இப்படி எல்லாம் பெயர் வைக்காமல், நல்ல டைட்டில் வைக்க கூட இயக்குனர்கள் கொஞ்ச நேரம் யோசிக்க கூடாதா என ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.





