கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் உருவாவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதனை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
இதற்கான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதில் நீண்ட முடியுடன், தாடி வைத்து வித்தியாசமான தோற்றத்தில் கமல்ஹாசன் இருந்தார். அதில் எதிரிகளை சண்டை போட்டு பந்தாடிய அவர், தன்னை ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அதில் மேலும் தன்னை காயல்பட்டினத்துக்காரன் என்று கமல்ஹாசன் கூறும் வசனமும் இடம் பெற்று இருந்தது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான நாயகன் திரைப்படத்தில், கமல்ஹாசனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி ஆகத்தான் இருந்தது. இதிலும் அதே பகுதியை குறிப்பிட்டு இருந்ததால் ஒருவேளை இது நாயகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாமோ என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
அதேபோல் இதுலயும் தன்னை ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்று கமல்ஹாசன் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். பழைய நாயகன் படத்தில் அவர் வேலுநாயக்கனாக நடித்ததால் இரண்டிற்கும் ஏதாவது தொடர்பிருக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கருதினர்.
இதில் த்ரிஷா துல்கர் சல்மான் ஜெயம் ரவி கௌதம் கார்த்திக் அபிராமி நாசர் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கால்சீட் பிரச்சனை காரணமாக துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலகினார். இப்போது அவருக்கு பதில் சிம்புவின் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இப்படியான சூழலில் அடுத்ததாக ஜெயம் ரவியும் படத்தை விட்டு வெளியேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தலுக்குப் பின்பே இதன் சூட்டிங் மீண்டும் தொடங்கப்படும் சூழலில், அவருக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மலையாள நடிகர் நிவின் பாலி அல்லது அரவிந்த்சாமி ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் இந்த திரைப்படத்தில் நடிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.





