தமிழில் சில நடிகைகள் மிக குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள், அவர்களது அழுத்தம் திருத்தமான நடிப்பு ரசிகர்களின் மனதில் எளிதில் இடம்பிடிக்க வைக்கிறது. அதனால் பல படங்களில் நடிப்பதை விட ரசிகர்களின் மனம் கவரும் படங்களில் நடிப்பதில் சில நடிகைகள் தெளிவான முடிவெடுக்கின்றனர்.
அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படம் மூலம் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன், அடுத்து நட்சத்திரம் நகர்கிறது கழுவேத்தி மூக்கன் ராயன் மற்றும் வேட்டையன் ஆகிய படங்களில் துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இதில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக துஷாரா நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் படத்திலும் மிக முக்கியமான கேரக்டரில் துஷாரா விஜயன் நடித்திருந்தார். பள்ளி ஆசிரியையான அவர் வில்லன்களால் கொல்லப்படும் நிலையில், அவரை மையப்படுத்திய கதையில்தான் இந்த படத்தில் ரஜினி நடித்திருந்தார். இந்த படமும் துஷாராவுக்கு நல்ல அடையாளத்தை தந்தது.
இப்போது துஷாரா விஜயன், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள வீரதீர சூரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கி உள்ளார். இந்த படமும் துஷாராவுக்கு நிச்சயமாக ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே துஷாரா விஜயன் நடிக்க உள்ள வெப்சீரிஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. புஷ்கர் காயத்ரி தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸில் துஷாரா விஜயன் நடிக்கிறார். இந்த வெப் சீரிஸை இயக்குனர் சற்குணம் இயக்க உள்ளார். கேரளாவில் இந்த வெப் சீரிஸ் முழுக்க படம் பிடிக்கப்பட உள்ளது. கதாநாயகியை மையப்படுத்தி கதையாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
களவாணி வாகை சூடவா நையாண்டி சண்டிவீரன் போன்ற படங்களை இயக்கியவர் சற்குணம். மஞ்சப்பை என்ற படத்தையும் தயாரித்தவர். இவர் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கும் ஒரு வெப் சீரிஸை இயக்குவதாக தகவல் வெளியானது. இப்போது துஷாரா விஜயன் நடிக்கும் வெப் சீரிஸ் ஒன்றையும் அவர் இயக்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படங்களில் நிறைய வாய்ப்புகள் இருக்கும் துஷாரா விஜயன் வெப் சீரிஸில் விரும்பி நடிப்பது, ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.





