திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கடந்த 25, 30 ஆண்டுகளுக்கு முன் படங்கள் ரிலீஸானால், தியேட்டர்களில் ரசிகர்களின் அமோக வருகையால், தியேட்டர்களில் குவியும் கூட்டத்தால், படம் பல நாட்களுக்கு ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடினால் மிகப்பெரிய வருமானமும் லாபமும் கிடைக்கும். இதுதான் அன்றைய தயாரிப்பாளர்களின் பெரிய வருமானமாக இருந்தது.
அதன்பிறகு சேட்டிலைட் டிவிகளின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில், தியேட்டர்களில் ரிலீசாகும் படங்களை சேட்டிலைட் சேனல்கள் ரிலீஸ் செய்தன. அதற்காக பல லட்சம் ரூபாய் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் கிடைத்தது. அதன் மூலமாகவும் தயாரிப்பாளர்கள் கணிசமான லாபம் அடைந்தனர். இதனால் முன்னணி நடிகர்களின் படங்களை சாட்டிலைட் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கியதால் தயாரிப்பாளர்களுக்கு கொழுத்த லாபம் கிடைத்தது.
கடந்த 5 ஆண்டுகளாக டிஜிட்டல் ரைட்ஸ் ஆக ஓடிடி தளங்களில், தியேட்டர்களில் ரிலீஸ் ஆன புதிய படங்களை 4 வாரங்களுக்கு பின் மீண்டும் ரிலீஸ் செய்ய உரிமம் பெறுகின்றன. இந்த உரிமம் பெறும் வகையில் பல கோடி ரூபாய் புதிய படங்களுக்கு கூடுதலாக தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கிறது. அதனால் புதிய படம் தயாரித்து ரிலீஸ் செய்யும் பட்சத்தில் தியேட்டர்கள் மூலமாகவும், சேட்டிலைட் சேனல்கள் மூலமாகவும், ஓடிடி தளங்கள் மூலமாகவும் மூன்று விதமான லாபம் தயாரிப்பாளர்கள் அடைகின்றனர்.
இதனால் நடிகர்களின் சம்பளமும் பல கோடி ரூபாய் கணிசமாக உயர்ந்தது. தயாரிப்பாளர்களும் 200 கோடி, 300 கோடி ரூபாய் என பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க முன்வந்தனர். ஓடிடி தளங்களில் படங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. ஒரு கட்டத்துக்கு பிறகு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் படங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. ரசிகர்களிடம் போதிய வரவேற்பு பெறாமல், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் சமீபகாலமாக ஓடிடி தளங்கள் படங்களின் விலையை கணிசமாக குறைத்து விட்டன.
முன்பு பல கோடி ரூபாய்க்கு படங்களை விலை கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனங்கள் இப்போது சில கோடிகளில் படங்களை வாங்குகின்றன. பல படங்களை வாங்குவதே இல்லை. அதனால் பல படங்கள் டிஜிட்டல் விற்பனை இல்லாமல் ரிலீஸின்றி முடங்கி கிடக்கின்றன. ஓடிடி தளங்களில் படங்கள் ரிலீஸ் ஆனால் சேட்டிலைட் சேனல்களில் படங்கள் திரையிடும் போது அந்த படங்களுக்கு டிஆர்பி ரேட்டிங் ஏறுவதில்லை. ரசிகர்கள் யாரும் அந்த படங்களை மீண்டும் டிவியில் பார்ப்பதில்லை. அதனால் சேட்டிலைட் சேனல்களும் படங்களை வாங்க போதிய ஆர்வம் காட்டுவதில்லை.
இப்படிப்பட்ட சூழலில் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி நடித்த திரு மாணிக்கம் என்ற படத்துக்கு சேட்டிலைட் விற்பனையும் உடனடியாக நடந்துள்ளது. அதேபோல் ஓடிடி நிறுவனமும் அந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. ஏனெனில் அந்த படத்துக்கு இப்போதே பெரிய எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் கிடைத்துள்ளது. பல பெரிய நடிகர்களின் படங்களே கண்டுக்கொள்ளப்படாத நிலையில், திரு மாணிக்கம் படத்தை நல்ல விலை கொடுத்து சேட்டிலைட், ஓடிடி நிறுவனம் வாங்கியிருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.





