தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அரசியல் களத்துக்கு வந்த பிறகு தமிழக மக்கள் மத்தியில் பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. பல்வேறு விமர்சனங்கள் சர்ச்சைகளையும் கடந்து நடிகர் விஜய்க்கு மக்கள் பெருவாரியான ஓட்டுகளை பதிவு செய்திருப்பதாக தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் நேற்று நடிகர் விஜய், திருச்செந்தூரில் வீற்றிருக்கும் செந்தில் ஆண்டவர் முருகப் பெருமானை அதிகாலையில் தரிசனம் செய்தார். பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து கையில் வேல் ஏந்திய நிலையில் முருக கடவுளிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டார். எதிரிகளை வீழ்த்தி இந்த தேர்தலில் பெரிய வெற்றி அடைய தவெக சார்பில் சத்ரு சம்ஹார யாகமும் அங்கு நடத்தப்பட்டது.
திருச்செந்தூரை தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட விஜய், சென்னை விமான நிலையம் வந்தடைந்தாா். அங்கிருந்து தனி விமானம் வழியாக மகாராஷ்டிரா சென்றடைந்தார். பிறகு அங்குள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்ற நடிகர் விஜய் வழிபாடு நடத்தினார்.
நடிகர் விஜய்க்கு ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் மிக தீவிரமான சாய்பாபா பக்தை. தனது அம்மாவுக்காக நடிகர் விஜய், சென்னை கொரட்டூரில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் சாயி மந்திர் என்ற சாய்பாபா கோவிலை கட்டித் தந்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 11ல் இங்கு கும்பாபிஷேகமும் நடந்தது.
இன்னும் தேர்தல் முடிவுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் அடுத்தடுத்து சில முக்கிய ஆன்மிக தலங்களுக்கு நடிகர் விஜய் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்பே அதுபற்றிய தகவல் தெரிந்தால் அங்கு மக்கள் கூட்டம் திரண்டு விடும் என்பதால் திடீர் திடீர் என விஜயின் ஆன்மிக பயணங்கள் முடிவு செய்யப்பட்டு உடனே விஜய் தனது பாதுகாவலர்களோடு அங்கு கிளம்பி விடுகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிவுகள் வரும் மே 4ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ரிசல்ட் தேதி நாள் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் மத்தியில் அச்சம் அதிகரிக்க துவங்கியுள்ளது. திமுக அதிமுக கட்சியினர் மீண்டும் ஆட்சிக்கு வருவோமா என்பதில் பலத்த குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையே நடிகர் விஜயின் தொடர் ஆன்மிக பயணங்கள் மேலும் அவர்களுக்கு கிலியை அதிகரித்து வருகிறது.





