தமிழ் சினிமாவில் நல்ல படங்களை ரசிகர்கள் கொண்டாட தவறுவதே இல்லை. அதே நேரத்தில் கமர்ஷியல் குப்பை படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சியை பார்த்தவுடனே குட் பை சொல்லவும் ரசிகர்கள் தயங்குவது இல்லை. அது கமல் நடித்த இந்தியன் 2 ஆக இருந்தாலும், சூர்யா நடித்த கங்குவா படமாக இருந்தாலும் குட் பை தான்.
அதே நேரத்தில் சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் கதையம்சம் சிறப்பாக இருந்தால் அழகான குழந்தையை மடியில் தூக்கி வைத்து கொஞ்சுவது போல அந்த படத்தை பாராட்டி சீராட்டி வெற்றியின் உச்சத்துக்கு கொண்டு செல்லவும் ரசிகர்கள் தயங்குவதில்லை. அந்த வரிசையில் காக்கா முட்டை பார்க்கிங் குட்நைட் லவ்டுடே குடும்பஸ்தன் லப்பர் பந்து படங்களை தொடர்ந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம்தான் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி.
நடிகர் சசிகுமார் நடிகை சிம்ரன் நடிப்பில் உருவான படம் டூரிஸ்ட் பேமிலி படத்தை 24 வயதான இளம் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த மே 1ம் தேதி ரிலீஸ் ஆனது. மில்லியன் டாலர் ஸ்டுடியோ மற்றும் எம்ஆர்பி என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.
இந்த படத்தில் சசிக்குமார் சிம்ரன் ஆகியோருடன் யோகி பாபு மிதுன் ஜெய்சங்கர் கமலேஷ் எம்எஸ் பாஸ்கர் ரமேஷ் திலக் பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டில் அகதிகளாக வந்து குடியிருக்கும் போது சந்திக்கும் பிரச்னைகளை சவால்களை காமெடி கலந்து சொன்ன படம் தான் டூரிஸ்ட் பேமிலி. யதார்த்தமான கதைக்களமும் கதாபாத்திரங்களும் காட்சிகளும் வசனங்களும் இந்த படத்தை பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட செய்துவிட்டன.
கடந்த 20 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் டூரிஸ்ட் பேமிலி படம் உலக அளவில் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த 20 நாட்களில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமே 53 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. உலக அளவில் மொத்தமாக 78 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் தியேட்டர்களில் கூட்டம் அதிகரித்து வருவதால், ரூ. 100 கோடி வசூலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.





