லால் சலாம், வேட்டையன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். லியோ திரைப்படத்தை எடுத்த கையோடு கிட்டத்தட்ட இந்த படத்திற்காக மட்டும் ஆறு மாதங்கள் திரைக்கதை அமைத்தார் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சூட்டிங் தொடங்கியது.
இதற்கு முந்தைய திரைப்படங்களில் போதைப் பொருள் கடத்தலையே மையப்படுத்தி கதைகளை எழுதி வந்த லோகேஷ் கனகராஜ், இந்த முறை தங்க கடத்தலை கையில் எடுத்திருக்கிறார். அதற்காகத்தான் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பிரம்மாண்டமாக செட் போட்டு காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள்.
அதேபோல் இந்த திரைப்படம் எல் சி யு வுக்குள் வராது என்றும் லோகேஷ் கனகராஜ் தெளிவுபடுத்தி இருந்தார். இந்த திரைப்படத்தில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் அதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் தான். ஜெயிலர் திரைப்படத்தைப் போன்று பல்வேறு மொழிகளில் உள்ள முக்கிய நடிகர்களை இதில் இடம் பெறச் செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அதன்படி தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, மலையாளத்திலிருந்து சோபின் சாஹிர், கன்னட மொழியில் இருந்து உபேந்திரா ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இதுபோக சத்யராஜ் மற்றும் சுருதிஹாசன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே இதிலிருந்து வெளியான சிக்கடு பாடலின் சிறிய பகுதி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
அது மட்டுமல்லாமல் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கான போஸ்ட் ப்ரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உபேந்திரா அந்த திரைப்படம் குறித்த தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் பாலிவுட் நடிகர் அமீர்கான் இருப்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார். தனக்கும் அமீர் கானுக்கும் இடையே காட்சியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் ரஜினிகாந்த், நாகர்ஜூனா, உபேந்திரா மற்றும் அமீர்கான் ஆகியோர் நான்கு பேரும் ஒரே பிரேமில் வருவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை அறிந்த ரஜினி ரசிகர்கள் விசில் போட தயாராகி வருகின்றனர்.





