இயக்குனர் வெற்றிமாறன் எங்கு போனாலும் அவரிடம் ரசிகர்கள் கேட்பது இரண்டே இரண்டு கேள்வி தான். ஒன்று வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தொடங்கும். மற்றொன்று வாடிவாசல் திரைப்படத்தின் சூட்டிங் எப்போது ஆரம்பிக்கும். இந்த இரண்டு கேள்விகளையும் மனிதன், செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்கொண்டாலும் அது குறித்து தெளிவான பதில்களை அவர் கொடுத்தது இல்லை.
பொல்லாதவன் திரைப்படத்தில் தொடங்கி ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளன. இதில் ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படத்திற்காக அவர் தேசிய விருதை பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் தான் சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி அவர் படம் எடுக்க முடிவு செய்தார். இதில் ஹீரோவாக சூர்யா அறிவிக்கப்பட, கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் சூர்யா வேறொரு திரைப்படத்தின் பிஸியாக இருந்ததால், அந்த இடைவேளையில் ஒரு சிறிய படத்தை இயக்க வெற்றிமாறன் முடிவு செய்தார்.
ஆனால் அந்த சிறிய படம் பெரிய படமாகி, இரண்டு பாகங்களாக சென்று இப்போது முழுக்க முழுக்க அதற்கே கவனம் செலுத்தி வருகிறார். ஆம் நாம் சொல்லிக் கொண்டிருப்பது விடுதலை திரைப்படத்தில் வேலைகளை பற்றி தான். சிறிய கால இடைவெளியில் குறைந்த பட்ஜெட்டில் அவர் எடுக்க இருந்த இந்த திரைப்படம், தற்போது வளர்ந்துள்ளது.
முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார் வெற்றிமாறன். அதே சமயம், சூர்யாவும் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் ஆரம்பம் முதலே வாடிவாசல் திரைப்படம் நடைபெறுவது சந்தேகம் தான் என்று பேசப்பட்டு வந்தது.
இந்தப் படத்தில் அமீர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் பருத்திவீரன் விவகாரம் பூதாகரமாக வெடிக்க சூர்யா இதில் நடிப்பதில் சந்தேகம் தான் என்று கூறப்பட்டு வந்தது. நடிகரும் இதுகுறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. வாடிவாசல் திரைப்படம் தனுஷின் சென்று விட்டதாகவும் ஒரு தகவல் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் வாடிவாசல் திரைப்படம் இன்னும் திட்டத்தில் இருப்பதாக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றிமாறன் உறுதி செய்து இருக்கிறார். இதனால் உற்சாகமடைந்திருக்கும் சூர்யா ரசிகர்கள், படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.





