கடந்த வாரம் சனிக்கிழமையன்று இரவு கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 9 குழந்தைகள் 18 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துயர சம்பவம் இன்னும் தமிழக மக்களின் மனங்களை ரணப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் நடந்த இந்த சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து ஒரு முக்கிய கேள்வியை தனது பதிவின் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு முன்வைத்திருக்கிறார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, கரூர் துயரத்தின் இறுக்கத்தில் இருந்து தமிழர்கள் மெல்ல மெல்ல விடுபட வேண்டும். ஊடகங்களும் சமூக உரையாடல்களும் அந்த மனத்தடையில் இருந்து வெளியேற வேண்டும். அரசியல் கூட்டங்களிலோ ஆன்மீகக் கூட்டங்களிலோ இனி இந்த நெடுந்துயரம் நிகழாது என்னும் விதி செய்ய வேண்டும்.
41 சாவுகள் கன்னத்தில் அறைந்து சொன்ன பாடம் இதுதான். இந்த கருப்புத் துயரத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய யாரும் ஒரு தனி அறையில் தன் மனச்சான்றோடு உரையாடி தானே தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு செய்தி என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது. எட்டு மணி நேரத்துக்கு மேல் ஒரு வேலையும் இன்றி 27 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்க முடியும் என்றால் அவர்களின் வாழ்வியல் என்ன?
அவர்களால் இழக்கப்படும் மனித வளம் என்ன? கல்வி நிறைந்த சமூகம் என்கிறோமே, இவர்களுக்கு கல்வி என்ன செய்தது? வெறும் எழுத்தறிவா கல்வி? காலத்தின் அருமையை வாழ்வின் பெருமையை கற்றுத் தருவதல்லவா கல்வி? அந்த 27 ஆயிரம் பேர் இன்னும் கலைந்து விடவில்லை. நாடெங்கும் அந்த மக்களை கணக்கெடுக்க வேண்டும்.
தொழில் கொடுத்து அவர்களுக்கு நேரமில்லாமல் செய்ய வேண்டும். நாளாகலாம்… ஆனால் அதை நோக்கி சமூகம் நடந்தே தீர வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து அந்த பதிவில் கூறியிருக்கிறார். அதாவது வேலை எதுவும் இல்லாததால் தான் அவர்கள் 8 மணி நேரம் வெட்டியாக அந்த கூட்டத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட மக்களை கணக்கெடுத்து தொழில் கொடுத்து அவர்களை பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்பதே கவிஞர் வைரமுத்து இந்த பதிவின் மூலம் அரசுக்கு வலியுறுத்தும் கருத்தாக உள்ளது. ஒரு சினிமா நடிகனை பல மணி நேரம் காத்திருந்து பார்ப்பதை காட்டிலும் தனது வாழ்க்கை ஆதாரமாக இருக்கும் தொழிலை கவனிக்க மக்கள் சென்றிருந்தால் இந்த துயர சம்பவமே நிகழ்ந்திருக்காது என்பதே கவிஞரின் பேராசையாக இந்த பதிவில் வெளிப்படுகிறது.





