தமிழ் சினிமாவில் முன்னணி பாடல் ஆசிரியராக வலம் வந்தவர் கவிஞர் வாலி. பல ஆயிரக்கணக்கான அற்புதமான பாடல்களை, ஜனரஞ்சகமாக கருத்தாழம் மிக்க பாடல்களை ரசிகர்களுக்கு தந்தவர். குறிப்பாக எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த பாடல்களை சாகாவரம் பெற்ற பாடல்களாக தந்திருக்கிறார் கவிஞர் வாலி.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விழா ஒன்றில் பேசிய கவிஞர் வாலி கூறியதாவது, எம்ஜிஆர் நடித்த எங்கள் தங்கம் படத்துக்கு அவரும் ஜெயலலிதாவும் சேர்ந்து பாடும் ஒரு காதல் பாடல் காட்சிக்கு நான் பாட்டு எழுதிக் கொண்டு இருந்தேன். அருகில் படத்தின் டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு, இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனும் இருந்தனர். விஸ்வநாதன் தந்த டியூனுக்கு நான் அளவோடு ரசிப்பவன் என்று பாட்டின் முதல் வரியை எழுதிவிட்டேன். அடுத்த வரி எனக்கு எழுத வரவில்லை.
பலமுறை யோசித்தும் அடுத்த வரியை என்னால் எழுதவே முடியவில்லை. ரொம்ப நேரமாக அதையே யோசித்துக்கொண்டே வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு இருந்தேன். என்னய்யா அடுத்த வரியை போடாமல் வெற்றிலை புகையிலை போட்டுட்டு இருக்கீங்க? என்றும் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு என்னிடம் கேட்டு விட்டார்.
நான் அளவோடு ரசிப்பவன் வரிக்கு பிறகு அடுத்த வரி வரவே இல்லை. ஒண்ணுமே தோணவில்லை. அப்போது அங்கு கலைஞர் வந்தார். என்னய்யா வாலி, பாட்டு எழுதீட்டாரா என்று கேட்டார். நான் விஷயத்தை சொல்லி நான் அளவோடு ரசிப்பவன் வரிக்கு பிறகு அடுத்த வரி வரவில்லை என்றேன். விஸ்வநாதனிடம் டியூனை போட்டு காட்டச் சொல்லி கேட்ட கருணாநிதி, உடனே நான் அளவின்றி கொடுப்பவன் என்று அடுத்த வரியை சொன்னார்.
எம்ஜிஆருக்கு எழுதினாரு பாட்டு, எம்ஜிஆருக்கு கலைஞர் எழுதின பாட்டு அது. நான் அசந்து போயிட்டேன். ஒரு மணி நேரமா யோசிச்சு யோசிச்சு வெத்தலை பாக்கு போட்டு எனக்கு கன்னமெல்லாம் வீங்கிப் போச்சு. இவர் உடனே சொல்லிட்டார். 10 நாள் கழிச்சு வாஹினி ஸ்டுடியோவில் எம்ஜிஆரை நேரில் பார்த்தேன்.
என்னை பார்த்த உடனே எம்ஜிஆர், கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தார். என்ன அண்ணா விசேஷம் என்றேன். அளவின்றி கொடுப்பவன் என்று என்னை பத்தி எழுதீட்டீரே என்றார். நீங்க முத்தத்தை கலைஞருக்கு கொடுங்க. இது அவர் எழுதினது, நான் எழுதினது இல்லே என்று கூறினேன் என்று அந்த விழாவில் கவிஞர் வாலி பேசினார். அந்த விழாவில் கலைஞர் கருணாநிதியும் அமர்ந்து கவிஞர் வாலி பேசியதை ரசித்துக்கொண்டு இருந்தார்.





