டைரக்டர் பாலாவின் இயக்கத்தின் வணங்கான் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக, படத்தின் டீசரை வெளியிட படக்குழு தயாராகி விட்டது. ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு கையில் பெரியார், ஒரு கையில் பிள்ளையார் என அருண் விஜய் இருந்த புகைப்படம் வெளியாக பரபரப்பை கிளப்பியது.
வணங்கான் படத்தில் முதலில் நடித்தது சூர்யாதான். சில மாதங்கள் படப்பிடிப்பிலும் சூர்யா கலந்துக்கொண்டார். கன்னியாகுமாி மாவட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஆனால் திடீரென நடிகர் சூர்யா – டைரக்டர் பாலா இடையே ஏற்பட்ட மோதலால், வணங்கான் படத்தில் நடிக்க மறுத்து, சூர்யா விலகி விட்டார்.
நடிகர் சூர்யா, இப்போது தமிழில் வளர்ந்துவிட்ட ஒரு முன்னணி நடிகராக இருக்கிறார். ஆனால் அவரை டைரக்டர் பாலா, நந்தா படத்தில் நடித்த சூர்யா போல மிக சாதாரணமாக மரியாதையின்றி பேசுவதும் நடத்துவதும் மற்றவர்களின் முன்னிலையில் சூர்யாவுக்கு பெருத்த மன உளைச்சலை தந்துள்ளது. இதனால்தான் வணங்கான் படத்தை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.
டைரக்டர் பாலா திறமையான கலைஞர், சிறந்த படைப்பாளியாக இருந்தாலும் அவர் பேசும் விதம், நடந்துக்கொள்ளும் பாங்கு சற்று கரடுமுரடாகவே இருக்கும். தனது படங்களில் நடிக்கும் கதாநாயகன்களுக்கு ஒரு பெரிய ஹீரோ என்பதற்கான அந்தஸ்தை, மரியாதையை தர மாட்டார். யூனிட்டில் வேலை செய்கிற லைட் பாயும்ல ஹீரோவும் அவருக்கு ஒன்றுதான்.
என் படத்தில் வேலை பார்க்கிற, நடிக்கிற ஒரு நபராகவே அவர் நடத்துவார். ஆர்யா, அதர்வா, விஷால் போன்றவர்களை மேடையில் பேசும்போது கூட அவன், இவன் என ஒருமையில்தான் குறிப்பிட்டு பேசுவார். இயக்குநர் மிஷ்கினும் இதுபோன்ற தன்மையில் இருப்பவர்தான். அவரும் தன் படத்தில் நடிப்பவர்களை பெரிய அளவில் மதிக்க மாட்டார். லியோ படத்தில் நடித்த போது நடிகர் விஜயை கூட பொதுவெளியில் ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
இந்நிலையில் இயக்குநர் பாலா இயக்கிய வணங்கான் படத்தின் டீசர் இப்போது வெளியாக தயாராக இருக்கிறது. வருகிற 19ம் தேதி (திங்கட்கிழமை) வணங்கான் டீசரை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதம் இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் வணங்கான் ரிலீஸ் ஆகும் என்ற பேச்சும் அடிபடுகிறது. டீசர் வெளியான பிறகு, வணங்கான் ரிலீஸ் குறித்தும் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.





