சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு, தனது முதல் திரைப்படத்திலேயே தான் ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார். சென்னை நகரத்தில் வாழும் ஒரு இளைஞர்கள் கூட்டம், அவர்களுக்குள்ளான காதல் மோதல் பாசம் பிரிவு என அனைத்தையும் ஒரு சேர காண்பித்து கலக்கி இருப்பார் வெங்கட் பிரபு.
இதன் பிறகு அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற ஆரம்பித்தன. சரோஜா, கோவா திரைப்படங்களை அடுத்து அஜித் குமாரை வைத்து மங்காத்தா படத்தை எடுத்தார் வெங்கட் பிரபு. இது இருவருக்குமே மிக முக்கியமான திரைப்படம் என்று கூறலாம்.
படம் ஆரம்பித்தது முதல் முடிவு வரை வெவ்வேறான நேர்கோட்டில் பாய்ந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இந்த திரைப்படம் அமைந்தது. அதுவும் அஜித்தின் 50-வது திரைப்படமாக அது வெளியானதால் அவரது ரசிகர்களுக்கு மிகச்சிறந்த கொண்டாட்டமாக அமைந்தது. இன்று வரை மங்காத்தா திரைப்படத்திற்கு ஒரு வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இதைத் தொடர்ந்து பிரியாணி மாஸ் என பல்வேறு திரைப்படங்களை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்ததாக சிம்புவை வைத்து மாநாடு என்னும் பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்தார். தற்போது தளபதி விஜய் வைத்து அவர் கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
சினேகா மீனாட்சி சௌத்ரி லைலா பிரசாந்த் பிரபுதேவா மைக் மோகன் பிரேம்ஜி அமரன் விடிவி கணேஷ் யோகி பாபு வைபோவ் அஜ்மல் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளது. இதில் விஜய்க்கு இரண்டு கதாபாத்திரங்கள் என்று கூறப்படுகிறது தந்தை மகன் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் சிஜி வேலைகளும் அற்புதமாக வந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
செப்டம்பர் 5ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில் தற்போது அதற்கான போஸ்ட் ப்ரோடக்சன் பணிகளில் பட குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த திரைப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்குகிறார். இது மாநாடு திரைப்படத்தைப் போல ஒரு அரசியல் களம் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுடன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சிவகார்த்திகேயனும் சீமானும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.





