இந்த ஆண்டு வெளியாக போகும் திரைப்படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் கோட். விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம் விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் பணிபுரிந்து இருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் இதன் சூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், முழு வீச்சாக வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் வெங்கட் பிரபு. தாய்லாந்து, துருக்கி, ரஷ்யா, சென்னை, திருவனந்தபுரம் என பல்வேறு பகுதிகளிலும் இதன் படபிடிப்பு நடத்தப்பட்டது.
இந்த திரைப்படத்தில் மிக முக்கியமான விஷயம் அதில் நடிக்கும் நட்சத்திரங்களை பற்றியதுதான். படத்தின் கதைக்காக ஏராளமானோரை நடிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. சினேகா லைலா மீனாட்சி சௌத்திரி பிரசாந்த் பிரபுதேவா அஜ்மல் வைபவ் வி டிவி கணேஷ் யோகி பாபு ஜெயராம் மைக் மோகன் பிரேம்ஜி அமரன் இவானா யுகேந்திரன் என இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இதில் மற்றொரு முக்கியமான விஷயம், நட்சத்திரங்களும் கேமியோ ரோலில் நடிப்பது தான். திரிஷா ஒரு பாடலுக்கு வந்து போகிறார். வெங்கட் பிரபுவுடன் அடுத்த படத்தில் இணையும் சிவகார்த்திகேயனுக்கும், இதில் சின்ன ரோல் இருக்கிறதாம். இதுபோக ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தையும் கொண்டு வருகிறார்கள்.
டைம் டிராவல் கான்செப்ட் என்பதால், நிச்சயம் வெங்கட் பிரபு பல ஆச்சரியங்களை வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி ஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம், விஜயை மிக இளமையாக காட்டும் முயற்சியிலும் படக்குழு ஈடுபட்டிருக்கிறது. தற்போது ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வந்தன.
அவதார், கேப்டன் மார்வெல், அவெஞ்சர்ஸ் போன்ற படங்களில் வி எஃப் எக்ஸ் பணிகளையும் மேற்கொண்ட லோலா நிறுவனத்திடம் தான் கோட் படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விஜயுடன் இணைந்து வெற்றிகரமாக vfx பணிகளை முடித்து இருப்பதாக வெங்கட் பிரபு அறிவித்திருக்கிறார். இதுபோக, கிராபிக்ஸ் பணிகளில் விஜய் மேற்கொண்ட போது எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.





